நாங்களும் இந்த நாட்டுலதான் இருக்கோம் மோடிஜி- பிரதமரை கலாய்த்த கர்நாடக முன்னாள் முதல்வர்

 

நாங்களும் இந்த நாட்டுலதான் இருக்கோம் மோடிஜி-  பிரதமரை கலாய்த்த கர்நாடக முன்னாள் முதல்வர்

பீகார் வெள்ளபாதிப்பு தொடர்பாக நிதிஷ் குமாருடன் பேசிய பிரதமர் மோடி, கர்நாடக வெள்ளம் தொடர்பாக எடியூரப்பாவுடன் பேசமால் இருந்ததை குற்றம் சாட்டி, நாங்களும் இந்த நாட்டுலதான் இருக்கோம் என பிரதமர் மோடியை கர்நாடக முன்னாள் முதல்வர் பரமேஸ்வரா கிண்டல் செய்தார்.

கடந்த வாரம் பெய்த கனமழையால் பீகார் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளகாடாக மாறிவிட்டது. இயற்கையின் கோரதாண்டவத்தால் பீகாரில் பல பகுதிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளன. இதுதொடர்பாக அம்மாநில முதல்வர் நிதிஷ் குமாருடன் பிரதமர் மோடி பேசினார். இது குறித்த தகவலை மோடி தனது டிவிட்டரில் பதிவு செய்து இருந்தார். அதில் முடிந்த அளவுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்ய தயாராக இருப்பதாக நிதிஷ் குமாரிடம் தெரிவித்தாக பதிவு செய்து இருந்தார். 

நிதிஷ் குமார்

தற்போது மோடியின் இந்த டிவிட் வைத்து அவரை குற்றச்சாட்டியுள்ளார் கர்நாடகாவின் முன்னாள் துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா. இது தொடா்பாக பரமேஸ்வரா டிவிட்டரில், கர்நாடகாவை காட்டிலும் பீகாரில் கூடுதலாக 12 தொகுதிகள் (மொத்தம் 40) இருப்பதால்தான் நிதிஷ் குமாருக்கு அழைப்பு வருகிறது என்றால் இது போன்ற நாட்களில் எங்களால் ஆச்சரியபடமால் இருக்க முடியாது. ஆனால் கர்நாடக முதல்வர் எடியூரப்பா வெள்ளம் குறித்து பேச மேற்கொண்ட முயற்சிகள் நிராகரிக்கப்பட்டது. நாங்களும் இந்த நாட்டில்தான் இருக்கிறோம். தேர்தல் நேரத்தில் மட்டுமே  கர்நாடகா மீது மோடி அக்கறை காட்டுகிறார் என பதிவு செய்து இருந்தார்.

மோடி

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளத்தால் கர்நாடகாக கடுமையாக பாதித்தது. 100 பேருக்கு மேல் பலியாகினர் மேலும் பல லட்சம் ஹெக்டேர் பரப்பில் பயிர்கள் நாசமாகின. இதனையடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து உடனடி நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி தரும்படி எடியூரப்பா கேட்டார். கட்டாயம் உதவுவதாகவும் அதேசமயம் இது குறித்து பிரதமர்தான் முடிவு எடுக்க வேண்டும் என அமித் ஷா கூறிவிட்டார். ஆனால் பிரதமர் அந்த நேரத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார்.