நஷ்டம் 2 மடங்கு அதிகரிப்பு…. தடுமாறும் பி.எஸ்.என்.எல்….. மறுமலர்ச்சி நடவடிக்கைகளை வேகப்படுத்துமா மத்திய அரசு?

 

நஷ்டம் 2 மடங்கு அதிகரிப்பு…. தடுமாறும் பி.எஸ்.என்.எல்….. மறுமலர்ச்சி நடவடிக்கைகளை வேகப்படுத்துமா மத்திய அரசு?

கடந்த டிசம்பர் வரையிலான 9 மாதத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நஷ்டம் 2 மடங்கு அதிகரித்து ரூ.39,089 கோடியாக அதிகரித்துள்ளது.

தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் பொதுத்துறை நிறுவனம் பி.எஸ்.என்.எல். அந்நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக  கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு இணையாக சேவைகளை வழங்க முடியாமல் பி.எஸ்.என்.எல். மிகவும் பின்தங்கிய நிலையில் கிடக்கிறது. இதற்கு நிதிநெருக்கடி மற்றும் வேகமாக புதிய தொழில்நுட்பங்களுக்கு மாறாது போன்றவை முக்கிய காரணமாகும்.

மத்திய இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே

இந்நிலையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நஷ்டம் இந்த நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் (2019 ஏப்ரல்-டிசம்பர்) 2 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய தொலைத்தொடர்பு துறை இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே கேள்வி ஒன்றுக்கு அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நஷ்டம் 2.5 மடங்கு அதிகரித்து ரூ.39,089 கோடியாக உயர்ந்துள்ளது. 2018-19ம் நிதியாண்டில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ரூ.14,904 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல்.

கடந்த ஆண்டு அக்டோபரில், பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய நிறுவனங்களுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் ரூ.68,751 கோடி மறுமலர்ச்சி திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. விருப்ப ஓய்வு திட்டம், 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு போன்றவையும் அதில் அடங்கும். மேலும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் எம்.டி.என்.எல். நிறுவனத்தை இணைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 78,300 பணியாளர்களும், எம்.டி.என்.எல். நிறுவனத்தின் 14,378 ஊழியர்களும் விருப்பு ஓய்வு திட்டத்தை தேர்ந்தெடுத்தனர். 

பி.எஸ்.என்.எல். மொபைல் இணைப்பு

கடந்த டிசம்பரில் தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களை காட்டிலும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் அதிக அளவில் புதிய மொபைல் இணைப்புகளை வழங்கியது. அந்த மாதத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிதாக 4.28 லட்சம் மொபைல் வாடிக்கையாளர்களை பெற்றது. இந்த நேரத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் புத்துயிர் நடவடிக்கைகளை மத்திய அரசு விரைவுப்படுத்தினால் எதிர்காலத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் மீண்டும் தொலைத்தொடர்பு துறையில் தனது கொடியை பறக்கவிடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.