நம்ம சென்னையில் இத்தனை கடற்கரைகள் இருக்கா…? இத்தனை நாள் தெரியாம போச்சே?

 

நம்ம சென்னையில் இத்தனை கடற்கரைகள் இருக்கா…? இத்தனை நாள் தெரியாம போச்சே?

இந்தியா முழுவதுமிருந்து நிறைய பேர் வந்து சென்னையில் செட்டிலாகி இருக்காங்கன்னு எல்லோருக்கும் தெரியும்… ஆனா, வெளிநாடுகள்ல இருந்து வர்ற சுற்றுலா பயணிகளுக்கும் நம்ம சென்னை பிடிச்சு போய், சத்தமில்லாம சென்னையிலேயே செட்டிலாகியிருக்காங்க என்கிற வரலாறு தெரியுமா? சென்னையைப் பற்றி புதுசா சொல்ல என்ன இருக்குன்னு நினைச்சுக்கிட்டே இதைப் படிக்கிறவங்க…

நம்ம சென்னையில் இத்தனை கடற்கரைகள் இருக்கா…? இத்தனை நாள் தெரியாம போச்சே?

இந்தியா முழுவதுமிருந்து நிறைய பேர் வந்து சென்னையில் செட்டிலாகி இருக்காங்கன்னு எல்லோருக்கும் தெரியும்… ஆனா, வெளிநாடுகள்ல இருந்து வர்ற சுற்றுலா பயணிகளுக்கும் நம்ம சென்னை பிடிச்சு போய், சத்தமில்லாம சென்னையிலேயே செட்டிலாகியிருக்காங்க என்கிற வரலாறு தெரியுமா? சென்னையைப் பற்றி புதுசா சொல்ல என்ன இருக்குன்னு நினைச்சுக்கிட்டே இதைப் படிக்கிறவங்க… சென்னையில இருக்கிற இந்த இடங்களை எல்லாம் ச்சும்மா போற போக்குல அதனுடைய அருமை தெரியாம பார்த்திருப்பீங்க… அல்லது இப்படி ஒரு இடம் இருக்கிறதே தெரியாம அதைக் கடந்து போயிருப்பீங்க. அப்படியான ஒரு லிஸ்ட் தான் இந்த கட்டுரை..

chennai

இன்னைக்கு சென்னையில தடுக்கி விழுந்த இடங்களில் எல்லாம் பெரிய பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் முளைச்சு, உலகின் டாப் 50 பெரிய நகரங்களில் ஒன்றாக சென்னை வளர்ந்து விட்டாலும், இன்னொரு பக்கம் அதோட பாரம்பரியத்தை கைவிடாம மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, மேற்கு மாம்பலம், திருவொற்றியூர்னு இன்னொரு பக்கம் சென்னை கலக்கிக்கிட்டு தான் இருக்கு. சரி அப்படிப்பட்ட சென்னையில் சுற்றிப்பார்க்க என்ன இருக்கிறது என்று யோசித்து ஒரு லிஸ்ட் ரெடி பண்ணீங்கன்னா… அதிகபட்சம் மெரினா கடற்கரையும், அண்ணா, எம்ஜியார், ஜெயலலிதா, கருணாநிதி சமாதியும் மட்டும் தான் நம்ம கண் முன்னாடி வந்து போகும். அதையும் தாண்டி இன்னும் சிலருக்கு பெசன்ட் நகர் பீச், சாந்தோம் சர்ச், கபாலீசுவரர், பார்த்தசாரதி கோவில்கள் நினைவுக்கு வரும். இவ்ளோ தான் நம்ம சென்னையா என்றால்.. நிச்சயமா கிடையாது. அதையும் தாண்டி சென்னையில் நூற்றுக்கணக்கில் சுற்றுலா அம்சங்கள் நிறைந்து இருக்கு. 
கலங்கரை விளக்கம், அண்ணா, எம்ஜியார், ஜெயலலிதா, கருணாநிதி நினைவிடங்கள், மகாத்மா காந்தி, அன்னி பெசன்ட், கால்ட்வெல், திருவள்ளுவர், பாரதியார், காமராஜர் என நாட்டுக்கு சேவைச் செய்த பலரின் நினைவு இடங்களும் சென்னையில் தான் இருக்கு. அரசு அருங்காட்சியகம், சென்னை ரயில் அருங்காட்சியகம், பிர்லா கோளரங்கம், விவேகானந்தர் இல்லம், வள்ளுவர் கோட்டம், புனித ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் பில்டிங், விக்டோரியா பொது மண்டபம், வண்டலூர் பூங்கா, முதலைப் பூங்கா, கிண்டி பூங்கா, அடையார் பூங்கா, சேத்துப்பட்டு ஏரி, தட்சிணசித்ரா, கலாசேத்ரா, சோழ மண்டலம் கலைஞர்கள் கிராமம், கபாலீசுவரர், பார்த்தசாரதி, புனித தாமஸ் மலை, சாந்தோம் சர்ச், கன்னி மேரி அர்மேனியா தேவாலயம், புனித மேரி தேவாலயம், ஆயிரம் விளக்கு மசூதி, திருவல்லிக்கேணி பெரிய மசூதி, ஷாப்பிங் செய்ய திநகர் பாண்டிபஜார், ஜார்ஜ் டவுன், பாரி முனை, பர்மா பஜார், மூர் மார்க்கெட், பலதரப்பட்ட பெரிய பெரிய மால்கள் என சென்னை மாநகரத்துக்குள்ளேயே பல இடங்கள் இருக்கின்றன. 

சென்னையில் மட்டுமே எத்தனை பீச் இருக்கு தெரியுமா? சென்னையிலேயே பல வருஷங்களா செட்டில் ஆனவங்களிலேயே கூட பலருக்கே இது தெரியாது. மெரினா பீச் சிட்டி சென்டரிலிருந்து 4 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. மெரினா பீச் போறதுக்கு கட்டணம் ஏதும் இல்லை. நாள் முழுக்க சுதந்திரமா பீச்சோட நீள அகலத்தை அளந்து பார்த்து விளையாடலாம். காத்து வாங்கலாம்.. கடலைப் போடலாம்….ச்சீய்… கடலை சாப்பிடலாம். ஒரு நாளைக்கு 30000 பார்வையாளர்கள் வரை வருகிறார்கள். வார இறுதி, விடுமுறை நாட்களில் 1 லட்சம் பேர் வரை வருகிறார்கள். மனதுக்கு இதமாக, காலார நடை போட, காதலர்கள் பேசி மகிழ, குடும்பத்துடன் குதூகலிக்க, நண்பர்களுடன் அரட்டை அடிக்கன்னு சென்னைவாசிகளுக்கும், சென்னைக்கு புதுசா வர்றவங்களுக்கும் எவர் க்ரீன் ஹாட் ஸ்பாட்டாக இருப்பது மெரினா பீச். 

அடுத்ததா சென்னையில் திருவான்மியூர் பக்கத்துல வால்மீகி நகருக்கு மிக அருகில் அமைந்துள்ள சிறிய அளவிலான கடற்கரை ப்ரீஸி பீச். சுற்றுலாப் பயணிகளை சமீப காலங்களில் வெகுவாக கவர்ந்திழுக்கும் இந்த இடம் மிகவும் அமைதியானது, தனிமையில் உரையாடவும், ஜாலியாக பொழுதை கழிக்கவும் செல்லலாம். சிட்டி சென்டரிலிருந்து 9 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இது பெரிய அளவில் பிரபலமானது இல்லை என்றாலும் உள்ளூர்வாசிகள் பலர் பொழுது போக்க இந்த கடற்கரைகளில் அமர்ந்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கின்றனர். மாலை வேளைகளில் ஓரளவுக்கு சுற்றுலாப் பயணிகளின் வரத்து காணப்படுகிறது. 
நெட்டுக்குப்பம் என்பது ஒரு கடற்கரையும் அதனுடன் சேர்ந்த கிராமம். மற்ற கடற்கரைகளைப் போல இங்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் எல்லாம் வர்றதில்லை. விழாக்களின் போதும், விடுமுறை மாலைகளிலும் குறைந்த அளவு சுற்றுலாப் பயணிகள் தான் இங்கே இருப்பாங்க. 
எண்ணூர் பகுதியில் இருக்கும் கடற்கரையை எண்ணூர் கடற்கரைன்னு சொல்வாங்க. இங்கேயும் கூட்டம் அதிகம் இல்லை என்றாலும் ஓரளவுக்கு சென்னை வாசிகளிடையே பழக்கமானது தான். கொசஸ்தலை ஆற்றுப் பகுதி, எண்ணூர் துறைமுகம் ஆகியவற்றால் இந்த கடற்கரை அதிக கவனம் பெறுகிறது. இந்த ஆறு கடலில் கலக்கும் இடமே நெட்டுக்குப்பம் பகுதி. 

இன்னும் சில பீச்கள் பாரதியார் நகர், பலகை தொட்டிக்குப்பம், திருவொற்றியூர்,காசிமேடு, பட்டினப்பாக்கம், காந்தி, கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈ.ஸி.ஆர் பீச், தங்க கடற்கரை என சென்னையைக் கடந்தும் அழகிய கடற்கரைகள் இருக்கின்றன. 
இது தவிர கோவளம் கடற்கரை இருக்கு. தமிழ்நாட்டின் பிரபலமான மீன் பிடி கிராமமான கோவளம், கடற்கரையை நேசிப்பவர்களுக்கு அற்புதமான அனுபவத்தை அளிக்கக் கூடிய சுற்றுலாத் தலம். சென்னையிலிருந்து ஜஸ்ட் 40 கிமீ தொலைவு தான். சென்னைக்கு ரொம்ப பக்கத்துலேயே கோவளம் இருப்பதால, வார இறுதியை குடும்பத்துடன் சந்தோஷமாக கழிப்பதற்காக ஏராளமான சென்னைவாசிகள்  மட்டுமில்லாம, ஹாஸ்டல் பொண்ணுங்க, சாப்ட்வேர் பசங்கன்னு கோவளத்திற்கு வர்றாங்க. இதனால, கோவளம் வார இறுதிகள்ல காதல் ஸ்பாட்டாகவும் மாறிடுச்சு. 
மெரினா கடற்கரை, உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையாய் இருக்கலாம், ஆனால் இளைஞர்களின் விருப்பமான கடற்கரை பெசன்ட் நகரில் இருக்கும் எலியட்ஸ் கடற்கரை தான். அப்போதைய சென்னை கவர்னர், எட்வர்ட் எலியட்ஸ் நினைவாக எலியட்ஸ் கடற்கரை என்று அழைக்கப்படுகிறது. 

அடுத்ததா சென்னையிலிருந்து 1 மணி நேரப் பயண தூரத்தில் அமைந்துள்ளது முட்டுக்காடு கடற்கரை.  இந்த கடற்கரை மிகவும் அழகியலோடு மட்டுமல்லாமல், காதலர்கள் விரும்பும் கடற்கரையாக உள்ளது. மிகவும் அமைதியான, அழகான இடம் என்பது இங்கு சென்று திரும்பியவர்கள் அனைவரும் சொல்லும் தகவல். இந்த கடற்கரையில் அலைச் சறுக்கு, பெடல் படகு, ரோ படகு போன்ற விளையாட்டுகள் இருக்கின்றன. 

மகாபலிபுரம் கடற்கரைக்கு சென்னையிலிருந்து ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் செல்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம். எப்படி மதுரையும், தஞ்சையும் தமிழர்களின் வரலாற்று பூமி என்று நம்பப்படுகிறதோ அதன்படியே, இதுவும் தமிழர்களின் கலை பூமி தான். சென்னையிலிருந்து 60 கிமீ தூரத்தில் இருக்கிற மகாபலிபுரத்தில் கடற்கரையோடு இருக்கிற குடைவரைக் கோவில்கள், பஞ்ச பாண்டவர் தேர்கள், பெரிய உருண்டை பாறை என சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்த பல விஷயங்கள் இருக்கிறது. சாகச பிரியர்கள் ஒருமுறை வந்தால் அவ்வளவு சீக்கிரத்தில் இடத்தை விட்டு கிளம்ப மாட்டார்கள்.