நம்பாதீங்க………ரூ.2 ஆயிரம் நோட்டை திரும்ப பெறும் திட்டம் இல்லை….. மத்திய அரசு தகவல்

 

நம்பாதீங்க………ரூ.2 ஆயிரம் நோட்டை திரும்ப பெறும் திட்டம் இல்லை….. மத்திய அரசு தகவல்

ரூ.2 ஆயிரம் நோட்டை திரும்ப பெறும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை என நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாகூர் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் புழக்கம் குறைவாக உள்ளது. இதற்கிடையே இந்தியன் வங்கி அண்மையில் தங்களது ஏ.டி.எம்.களில் இனி ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வராது என அறிவித்தது. மேலும் ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை மத்திய அரசு அச்சடிப்பதும் குறைந்தது. இதனையடுத்து மத்திய அரசு ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெற போவதாக வதந்திகள் அடிக்கடி பரவி வருகிறது.

அனுராக் சிங் தாகூர்

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் ரூ.2 ஆயிரம் நோட்டு தொடர்பான உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாகூர் எழுத்துப்பூர்வமான பதிலில் கூறியிருப்பதாவது: ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெறும் திட்டம் அரசுக்கு இல்லை. ரூ.2 ஆயிரம் நோட்டுக்கு சில்லரை மாற்றுவது பெரிய பிரச்சினையாக உள்ளது. ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுக்களுக்கு ஆதரவாக இருக்கும் வகையில் தங்களது ஏ.டி.எம்.களை எஸ்.பி.ஐ. மற்றும் இந்தியன் வங்கிகள் மறுஅமைப்பு செய்து வருகின்றன.

ரூ.200 நோட்டுக்கள்

ரிசர்வ் வங்கியின் ஆலோசனையின்படி, மத்திய அரசு ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கிறது. அதேவேளை புழக்கத்தில் உள்ள ரூபாய்களின் சமநிலையை பராமரிக்க முயற்சி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். தற்போதைய நிலவரப்படி, ரூ.7.40 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன. அதேசமயம் ரூ.100 மற்றும் ரூ.50 நோட்டுக்கள் முறையே ரூ.1.96 லட்சம் கோடி மற்றும் ரூ.43,784 கோடியும் புழக்கத்தில் உள்ளன.