நடுவானில் மோதிக் கொண்ட இந்திய விமானப்படை விமானங்கள்-வீடியோ

 

நடுவானில் மோதிக் கொண்ட இந்திய விமானப்படை விமானங்கள்-வீடியோ

விமான கண்காட்சி நாளை துவங்க உள்ள நிலையில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பெங்களூரு: விமான கண்காட்சி நாளை துவங்க உள்ள நிலையில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி நாளை தொடங்குகிறது. மத்திய பாதுகாப்பு துறை சார்பில், “ஏரோ இந்தியா – 2019” என்ற பெயரில் நடைபெறும் சர்வதேச விமான கண்காட்சி நாளைதொடங்கி 24-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

பெங்களூருவில் உள்ள எலஹங்கா விமான படை தளத்தில் நடைபெறும் இக்கண்காட்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விமானங்கள் பங்கேற்கின்றன. முன்னதாக, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 44 பேர் வீரமரணம் அடைந்ததால், விமானக் கண்காட்சிக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான சூர்ய கிரண் என்ற 2 விமானங்கள், விமான கண்காட்சிக்கான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தன. இந்த பயிற்சியின் போது எதிர்பாராதவிதமாக இரு விமானங்களும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகின. 

விபத்துக்குள்ளான விமானங்களில் மூன்று விமானிகள் பயணித்ததாகவும், அதில் ஒருவர் உயிரிழந்து விட்டார். மற்ற இரு விமானிகளும் பாதுகாப்பாக வெளியே குதித்ததால் இருவரும் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக, முதற்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன. விமான விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.