நடுத்தர மக்களின் பாக்கெட்டை பதம் பார்க்கும் தக்காளி! விலை உயர்வில் வெங்காயத்துடன் போட்டி போடும் தக்காளி

 

நடுத்தர மக்களின் பாக்கெட்டை பதம் பார்க்கும் தக்காளி! விலை உயர்வில் வெங்காயத்துடன் போட்டி போடும் தக்காளி

வெங்காயத்தை தொடர்ந்து தற்போது தக்காளியின் விலையும் உயர்ந்து வருகிறது. தலைநகரில் தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது.

பொதுவாக குடும்பங்களின் அன்றாய சமையல்களில் வெங்காயம், தக்காளி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வெங்காயம் அதிகம் சாகுபடி நடக்கும் மாநிலங்களில் கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் வெங்காய சாகுபடி கடுமையாக பாதித்தது. இதனால் சந்தைக்கு வெங்காய வரத்து குறைந்தது. அதன் எதிரொலியாக வெங்காயத்தின் விலை விறுவிறுவென உயர்ந்து வருகிறது. 

வெங்காயம் சந்தை

வெங்காய விலை உயர்வு சாமானிய மக்களுக்கு கூடுதல் செலவினத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் மத்திய அரசு வெங்காய விலையை குறைக்க, கையிருப்பில உள்ள வெங்காயத்தை விற்பனை செய்து வருகிறது. இதனால் வெங்காயத்தின் விலை பெரிய அளவில் ஏற்றம் காணாமல் உள்ளது. இந்த சூழ்நிலையில் மக்களின் பாக்கெட்டை பதம் பார்க்கும் வகையில் தக்காளின் விலையும் உயர்ந்து வருகிறது.

சில மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ள சேதத்தால் தக்காளி வரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தலைநகரில் தக்காளி விலை உயர்ந்து வருகிறது. டெல்லியில் மட்டுமல்ல நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தக்காளி விலை உயர்ந்து வருகிறது. டெல்லியின் மொத்தவிலை சந்தையான அசாத்பூர் மண்டியில் 25 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.800க்கு மேல் விற்பனையானது.

தக்காளி சந்தை

பண்டிகை காலத்தில் தேவை அதிகமாக இருக்கும் என்பதால் வரும் நாட்களிலும் தக்காளியின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். எந்த பொருட்களின் விலை உயர்ந்தாலும் அதிகம் பாதிக்கப்படபோவது என்னவோ சாமானிய மக்கள்தான்.