நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சு; என்ன சொல்கிறார் முதல்வர் பழனிசாமி

 

நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சு; என்ன சொல்கிறார் முதல்வர் பழனிசாமி

அதிமுக செயல் வீரர்கள் கூட்டதிற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சு குறித்து பதிலளித்துள்ளார்

மதுரை: அதிமுக செயல் வீரர்கள் கூட்டதிற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சு குறித்து பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் உள்பட பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. எனவே, திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

இந்நிலையில், இடைத்தேர்தலை எதிர்கொள்வது குறித்த அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் மதுரையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ஆர்.கே.நகர் போன்று திருப்பரங்குன்றத்தில் நடைபெறாது. ஏற்கனவே இந்த தொகுதியில் 8 முறை அதிமுக வென்றுள்ளது. இந்த நிலை நீடிக்கும். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெரும். இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானதும், அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றனர்.

கருணாஸ் விவகாரத்தில் சட்டம் கடமையை செய்யும் என்று கூறிய முதல்வர், தமிழகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலெர்ட்டை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் அரசியல் தொடர்பான பேச்சு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் கட்சி ஆரம்பிக்கவும், கருத்து கூறவும் அனைவருக்கும் உரிமை உண்டு என்றார்.