நடிகர் சூர்யா… தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்

 

நடிகர் சூர்யா… தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்

அம்மா பெயரில் ஒரு அன்பு மாளிகையை உருவாக்கி அதில் தன் அப்பா, அம்மா, தம்பி கார்த்தி குடும்பம், தன் குடும்பம் என எல்லோரையும் ஒரே இடத்தில் வசிக்கும் சூழலை உருவாக்கியிருப்பவர் சூர்யா

இன்று தனது 44வது பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகர் சூர்யாவின் பெர்சனல் பக்கம் இது. அவரைப் பற்றி தெரியாத பல சுவாரஸ்யமான தகவல்கள் நமது வாசகர்களுக்காக… 

suriya

‘லட்சுமி இல்லம்’ என தனது அம்மா பெயரில் ஒரு அன்பு மாளிகையை உருவாக்கி அதில் தன் அப்பா, அம்மா, தம்பி கார்த்தி குடும்பம், தன் குடும்பம் என எல்லோரையும் ஒரே இடத்தில் வசிக்கும் சூழலை உருவாக்கியிருப்பவர் சூர்யா. இன்றைக்கும் அவரது கூட்டுக் குடும்ப நேசத்தை வீட்டு விஷேசங்களுக்கு வரும் நெருக்கமான உறவினர்கள், ’‘மனைவியை கவனிச்சிருக்குறதுல நம்ம சூர்யா மாதிரி இருக்கணும்!’’னு எல்லோரும் சொல்வது வழக்கம். அதை எப்போதும் நிருபித்துக்கொண்டே இருப்பவர் அவர். அப்பா சிவக்குமார் மீதும், அம்மா லட்சுமி மீதும் அளவற்ற பாசம் வைத்திருக்கும் மகன் சூர்யா, பெற்றோர்களை இந்தியாவில் ஒரு இடம் விடாமல் சுற்றுலா அழைத்துப் போவதை ஒரு வேலையாகவே வைத்திருக்கிறார்.

suriya

தமிழ் சினிமாவில் எப்படி பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வலம் வருகிறாரோ அதே போல் ஆந்திராவிலும், கேரளாவிலும் கூட சூர்யாவின் பட ரிலீஸ் சமயங்களில் திருவிழா தான்!
புகைப்பிடிக்கும் காட்சிகள் சூர்யாவின் ஆரம்ப கால கட்ட சினிமாக்கள் சிலவற்றில் மட்டுமே பார்க்க முடியும். தனது மார்க்கெட் வேல்யூ உயர உயர தனக்கான ரசிகர்கள் பட்டாளம் சூழச் சூழ புகை பிடிக்கும் காட்சிகளுக்கு நடிகர் சூர்யா முற்றிலுமான முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டிருப்பவர்.
பெரிய ஸ்டார் நடிகராக வளர்ந்த பிறகும் கூட, கதை கேட்கும் போது சந்தேகங்கள் கேட்பதோடு சரி. அதன் பிறகு படப்பிடிப்புக்கு வந்து செல்வதில் ஆரம்பித்து ரிலீஸ் புரொமோஷன் வரைக்கும் அப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளரின் நாயகனாக, இருப்பவர் சூர்யா. 

suriya

படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் புகைப்படம் எடுக்க வேண்டும் என விரும்பி அணுகும் போது அவர்களை கைக்குளுக்கி வரவேற்று கொஞ்சமும் முகம் சுழிக்காமல் அவர்களுக்கு நேரம் ஒதுக்கும் எளிமையான கலைஞன். தேடி வரும் ரசிகர்கள் பட்டாளத்தில் பெண்கள் இருந்தால் அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பும் வரை விசாரித்து வழி அனுப்பும் அக்கரை மனிதன்.
படப்பிடிப்பு இருக்கும் தேதிகளில் நடிகர் சூர்யா எந்த ஒரு நிகழ்ச்சியும் ஒப்புக்கொள்வதில்லை. தன்னால் படம் தயாரிக்கும் ஒரு தயாரிப்பாளர் எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது என அப்பா சிவக்குமார் சொன்ன வார்த்தைதான் அதற்கு காரணம். 

suriya

தனக்கு ரசிகனாக இருப்பவர்கள் குடும்பத்துக்கு பொறுப்பானவர்களாக இருக்க வேண்டும் என்பது சூர்யாவின் அலாதியான விருப்பம். ஒரு கல்லூரி நிகழ்ச்சிக்கோ அல்லது பொது நிகழ்ச்சிக்குச் சென்றாலும், ‘இளைஞர்கள் முதலில் குடும்பத்தை கவனியுங்கள். அப்பா, அம்மாவை பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று பேசாமல் மேடை இறங்கவே மாட்டார்.
பொது விஷயங்களிலும், மக்கள் சார்ந்த நிகழ்வுகளிலும் தன்னை ஒரு சாமானியனாக அடையாளப்படுத்திக் கொள்வதையே இன்று வரையில் பின்பற்றுகிறவர். அதில் லேட்டஸ்ட் ஹிட் ‘புதிய கல்வி கொள்கை’ குறித்த பேச்சும் அடங்கும். தன் மனசுக்கு சரியென்று தோன்றுவதை பேச தயங்கியதே இல்லை. உதட்டிலிருந்து உதிர்ந்த வார்த்தைகளுக்கு நாம்  தான் பொறுப்பு என்று, அப்படி பேசிய வார்த்தைகளில் இருந்து பின்வாங்கியதும் கிடையாது. 

suriya

தன்னோட வாழ்நாள் மந்திரமாக சூர்யா கடைப்பிடிப்பது, `இதுவும் கடந்து போகும்’ என்பதுதான். ஆரம்ப கால தொடர் தோல்விகளின் போது, தன்னுடைய அப்பா சொன்ன இதைத்தான் இப்போது வரையில் வேதவாக்காக பின்பற்றி வருகிறார்.‘முன்னணி நடிகர்கள் சிலர் விளம்பரப் படங்களில் கவனம் செலுத்துவதில்லை. அவ்வபோது சூர்யாவை விளம்பரப்படங்களில் பார்க்க முடிகிறதே?’ என பலரும் கேட்கிறார்கள். தான் விளம்பர படங்களில் நடித்து கிடைக்கும் கடைசி ஒரு ரூபாய் வரைக்கும் தனது ‘அகரம் ஃபவுண்டேஷன்’ நிறுவனக் குழந்தைகளின் கல்வி பயனுக்காகவே செலவிடுகிறார். அதற்காக மட்டுமே விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.

suriya

சூர்யாவுக்கு ரொம்ப பிடித்த மனிதர்கள் இரண்டு பேர், ஏ. ஆர்.ரகுமான், தோனி. `பல வெற்றிகளை கொடுத்தும், இன்னும் எப்படி இவ்வளவு அடக்கமாக இருக்க முடியும் என்பது இவர்களிடத்தில்தான் கற்றுக்கொண்டேன்’ என்று சூர்யா பலமுறை குறிப்பிட்டுள்ளார்.படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்தால் ஒரு மகனாக, ஒரு கணவனாக, பிள்ளைகளுக்கு அப்பாவாக பார்க்க முடியுமே தவிர நடிகனாக பார்க்கவே முடியாதவர். தன் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் ஒரு நிகழ்ச்சி என்றால் தவறாமல் கலந்துக் கொள்ளும் ஒரு தந்தைக்கு உரிய பொறுப்பை எப்போதும் தவறாதவர்.

surya

தன்னை எப்போதும் ஒரு ஸ்டார் என ஒரு வட்டத்துக்குள் வைத்துக்கொள்ள விரும்பாத மனிதர். யாரும், எந்த நேரத்திலும் எளிதாக அணுகக்கூடியவராக இருப்பது சூர்யாவின் குணம். கமல்தான்  சூர்யாவுக்கு குரு.`தேவர் மகன்’ படம் வந்த சமயத்தில் அதில் வரும் கமலைப் போன்றே பன்க் தலையோடு வலம் வந்தார். `கஜினி’ பட வெற்றியின் போது, `ஒரு அண்ணனோட இடத்திலிருந்து சந்தோசப்படறேன்’ என்று கமல் சொன்னது, தான் சூர்யா கொண்டாடும் பெரிய பாராட்டு. தீவிரமான கமல் ரசிகர். 

suriya

சிவகுமாரும், சூர்யாவும் மலேசியாவுக்கு விமானத்தில் சென்றனர். அப்போது, `ஏன் இவ்வளவு கம்மியாகத் தண்ணீர் தருகிறார்கள்’ என அப்பாவிடம் கேட்க, விமானப் பணிப்பெண்ணை அழைத்து 2 கிளாஸ் எடுத்து வரச் சொல்லி, சூர்யாவை `ஒரு கிளாஸ் எடுத்துக் குடி’ என்றார். சிறு துளி நாக்கில் பட்டதும், `என்னது இது? இப்படிக் கசக்கிறது?’ என்று கேட்க, `இதுதான் வோட்கா. நம்ம ஆளுங்க சந்தோசம் வந்தாலும் துக்கம் வந்தாலும் இதுல தான் மூழ்கி அழிஞ்சு போயிடுறாங்க’ என்றார். அப்போதிலிருந்து இப்போ வரை மது, சிகரெட் போன்ற எந்தக் கெட்ட பழக்கமும் சூர்யாவுக்கு இல்லை.

suriya

முதன் முதலில் வேலைப் பார்த்த கார்மென்ட்ஸில் தான் வாங்கிய முதல் சம்பளமான 1,200 ரூபாயில், ஆரஞ்சு நிறப் புடவையைத் தன் தாய் லட்சுமிக்கு வாங்கிக் கொடுத்தார். 
தந்தை சிவகுமார் இலக்கியத்தில் வரும் 100 மலர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு சூர்யாவிடம் கொடுத்து, இதனை மனப்பாடம் செய்து விட்டால், உன் மூளை கொஞ்சம் வலுப்பெறும் என்றார். பின்னர் சில நாள்கள் கழித்து 100 மலர்களின் பெயர்களை கட கடவென்று கூற, இதை பார்த்த இயக்குநர் வசந்த் `பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் அதை ஒரு காட்சியாக வைத்தார்.