நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல்…ஒப்புதலின்றி அறிவிப்பு கூடாது என நீதிமன்றம் உத்தரவு!

 

நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல்…ஒப்புதலின்றி அறிவிப்பு கூடாது என நீதிமன்றம் உத்தரவு!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. நடிகர் நாசர் தலைமையில் ‘பாண்டவர் அணி’யும், நடிகர் பாக்யராஜ் தலைமையில் ‘சுவாமி சங்கரதாஸ் அணியும்’ களமிறங்கியது. இதில் திரை பிரபலங்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

 

இதனிடையே தேர்தலை  ரத்து செய்ய கோரி  ஏழுமலை என்பவர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தார். இந்தவழக்கு விசாரணை கடந்த மாதம்   சென்னை உயர்நீதி மன்ற  நீதிபதி கல்யாணசுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து  இந்த வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது. 

இதையடுத்து தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்கச் சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜி கீதாவை தமிழக அரசு நியமித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விஷால் தரப்பில், 3000 உறுப்பினர்கள் உள்ள சங்கத்தில் மூன்று நான்கு பேர்கள் சொல்லும் புகாரை ஏற்று தனி அதிகாரியை நியமித்துள்ளது சட்ட விரோதமானது. எனவே அரசின் உத்தரவை ரத்து செய்யவேண்டும்  என்று மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தையும் விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

 நடிகர் சங்கம் தொடர்பான வழக்குகளில் கடந்த மாதம் ,   நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்து உயர் நீதிமன்ற நீதிபதி  உத்தரவிட்டுள்ளார். மேலும் புதிய தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல் தாஸ்  நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.  தனி நீதிபதியின் இந்த உத்தரவை ரத்து செய்து வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என நடிகர் விஷால் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

 

இந்நிலையில் இந்த வழக்கு  நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் தரப்பில், பல்வேறு சங்கங்கள் பதவிக்காலம்  முடிந்த பிறகும் நிர்வகித்து வந்தனர் என்று வாதிடப்பட்டது. 

ttn

இதையடுத்து நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்தும் நடைமுறையை தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. *உயர்நீதிமன்ற ஒப்புதலின்றி தேர்தல் அறிவிப்பாணை வெளியிடக்கூடாது என தேர்தல் அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும்  தேர்தலை ரத்து செய்து தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை பிப். 20ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.