நக்கீரன் கோபாலுக்கு எதிரான காவல்துறையின் வழக்கு தள்ளுபடி

 

நக்கீரன் கோபாலுக்கு எதிரான காவல்துறையின் வழக்கு தள்ளுபடி

நக்கீரன் கோபாலுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை: நக்கீரன் கோபாலுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவிக்கும் தமிழக ஆளுநருக்கும் தொடர்பு இருப்பதாக நக்கீரன் இதழில் செய்தி வெளியாகியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக போலீசாரிடம் ஆளுநர் மாளிகை புகார் அளித்தது. அதனடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நக்கீரன் கோபாலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர்.

வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், நக்கீரன் கோபாலுக்கும் ஆளுநருக்கும் நேரடி தொடர்பு இல்லாத போது ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக எவ்வாறு கூற முடியும் என்று கூறி அவரை சிறையில் அடைக்க மறுத்து சொந்த ஜாமீனில் விடுவித்தது. எழும்பூர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை வழக்கு தொடர்ந்தது.  

இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், எழும்பூர் குற்றவியல் நடுவர் மன்றம், சட்டப் பிரிவுகளை ஆய்வு செய்து முறையாக விசாரித்துள்ளதாகவும், காவல்துறையினர் யோசிக்காமல் இயந்தரத்தனமாக செயல்பட்டுள்ளதாகவும் கூறி மனுவை தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.