தோளில் கைபோட்டு பேசும் ரத்தன் டாடாவின் உதவியாளர்! – 27 வயதில் சாதித்த கதை..

 

தோளில் கைபோட்டு பேசும் ரத்தன் டாடாவின் உதவியாளர்! – 27 வயதில் சாதித்த கதை..

ரத்தன் டாடாவின் உதவியாளராக 27 வயதே ஆன மும்பையைச் சேர்ந்த இளைஞர் பணியாற்றி வருகிறார்.

ரத்தன் டாடாவின் உதவியாளராக 27 வயதே ஆன மும்பையைச் சேர்ந்த இளைஞர் பணியாற்றி வருகிறார். இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும் கோடீஸ்வரர்களில் ஒருவருமான ரத்தன் டாடாவின் உதவியாளராக இவ்வளவு இளம் வயதில் எப்படி அவர் தேர்வு செய்யப்பட்டார் என்ற ரகசியத்தை சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ளார். ஹியூமன்ஸ் ஆஃப் பாம்பே என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் ரத்தன் டாடாவின் உதவியாளர் சாந்தனு நாயுடு தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார். 

dada

“2014ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்துவிட்டு டாடா குழுமத்தில் வேலைக்கு சேர்ந்தேன். வாழ்க்கை அமைதியாக சென்றுகொண்டிருந்தது. ஒரு நாள் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தேன். அப்போது, சாலையில் ஒரு நாய் அடிபட்டு இறந்துகிடந்தது. அதைப் பார்த்ததும் என் மனது ஏதோ செய்தது. உடனே, அங்கு சென்று சாலையில் இறந்துகிடந்த நாயின் உடலை ஓரமாக போடலாமா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது, ஒரு கார் என் கண் முன்பாகவே அந்த நாயின் உடலின் மீது ஏறி இறங்கி வேகமாக சென்றது. 

dog

நாய்கள் இப்படி சாலையில் இறப்பதை தவிர்க்க ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. அப்போது என்னுடைய நண்பர்களை அழைத்து நாயின் கழுத்தில் பொருந்தக் கூடியது போன்ற ஒளிரும் பட்டை ஒன்றைத் தயாரித்து தரும்படி கேட்டேன். அதன்படி அவர்களும் தயாரித்தனர். அதை எங்கள் பகுதியில் உள்ள தெரு நாய்க்கு எல்லாம் அணிவித்தோம். இது பலன் அளிக்குமா இல்லையா என்று தெரியாது. ஆனால், ஒவ்வொரு நாள் காலை கண் விழிக்கும்போதும், உங்கள் ஒளிரும் பட்டை காரணமாக நாய் காப்பாற்றப்பட்டது என்ற தகவல் வரும். கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கும். எங்களின் இந்த செயல், டாடா குழும நியூஸ்லெட்டரிலேயே வௌியானது. பலரும் எங்களுக்கு போன் செய்து ஒளிரும் பட்டை வேண்டும் என்று கேட்டார்கள்.

chandhanu

இந்த திட்டத்தைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தோம். ஆனால், எங்களிடம் நிதி இல்லை. எனவே, நன்கொடை பெறலாம் என்று முயற்சி செய்தோம். அப்போது என் அப்பாதான் நாய்களை விரும்பும் ரத்தன் டாடாவிடம் ஏன் நிதி உதவி கேட்கக் கூடாது என்று கேட்டார். முதலில் அதெல்லாம் சரியாக இருக்காது என்று மறுத்தேன். பிறகு ஏன் அவரிடம் கேட்கக் கூடாது என்று தோன்றியது. எனவே, அவருக்கு என் கைப்படக் கடிதம் எழுதினேன். 

chandhanu

இரண்டு மாதங்களுக்குப் பிறகு என்னுடைய வாழ்க்கையே மாறிவிட்டது. ரத்தன் டாடா கையெழுத்திட்ட கடிதம் எனக்கு வந்தது. அதை திறந்து பார்த்தபோது அவர் என்னுடைய வேலையை நேசிப்பதாகவும், என்னை சந்திக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், என்னால் அதை நம்ப முடியவில்லை.
அதன் பிறகு சில நாட்கள் கழித்து மும்பையில் அவருடைய அலுவலகத்தில் அவரை சந்தித்தேன். என்னுடைய இந்த செயல் அவரை வெகுவாக ஈர்த்துவிட்டது என்றார். பிறகு அவர் தன்னுடைய நாய்கள் உள்ள இடத்துக்கு அழைத்து சென்றார். அதன்பிறகு எங்கள் நட்பு தொடர்ந்தது. என்னுடைய திட்டத்துக்கு நிதி உதவியும் செய்தார்.

chandhanu

அதன் பிறகு என்னுடைய பட்ட மேற்படிப்புக்காக சென்றேன். அப்போது அவரிடம் நான் பட்டமேற்படிப்பு முடித்ததும் என்னுடைய வாழ்க்கையை டாடா அறக்கட்டளைக்காக அர்ப்பணிப்பேன் என்று கூறினேன். அதை அவரும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். நான் படித்து முடித்து இந்தியா திரும்பியதும் அவர் எனக்கு போன் செய்தார். “இங்கே என்னுடைய அலுவலகத்தில் நிறைய வேலைகள் உள்ளன. எனக்கு உதவி செய்ய முடியுமா?” என்று கேட்டார். நான் என்ன சொல்வது என்று தெரியாமல் ஸ்தம்பித்தேன். மூச்சை ஆழமாக இழுத்துவிட்டு ஒரு சில விநாடிகள் கழித்து யெஸ் சொன்னேன்.

ttn

அவருடன் இணைந்து பணியாற்றத் தொடங்கி 18 மாதங்கள் கடந்துவிட்டன, அவர் என்னை அதிகம் நம்புகிறார். இவை எல்லாம் கனவுதானா என்று இப்போது நானே என்னுடைய கையை கிள்ளிப் பார்த்துக்கொள்கிறேன்… எனது வயதினர் சரியான நண்பர், வழிகாட்டி, பாஸ் வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், எனக்கு அந்த மூவரும் ஒருவராக ரத்தன் டாடா கிடைத்துள்ளார். என் அதிர்ஷ்டத்தை என்னாலே நம்பமுடியவில்லை” என குறிப்பிட்டுள்ளார் சாந்தனு.