தோல்வி பயம்..? வேட்பாளரின் மாமனாரைத் தாக்கிய மர்மநபர்கள்… காப்பாற்றிய நாய்!

 

தோல்வி பயம்..? வேட்பாளரின் மாமனாரைத் தாக்கிய மர்மநபர்கள்… காப்பாற்றிய நாய்!

திருச்சியில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த வேட்பாளரின் மாமனார் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள கல்லுப்பட்டியை சார்ந்தவர் சீரங்கன் (63). இவரது மருமகள் வையம்பட்டி ஒன்றியத்தின் 13வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க சார்பில் போட்டியிடுகிறார். தன்னுடைய மருமகளின் வெற்றிக்காக சீரங்கன் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று முன்தினம் மேற்கு கல்லுப்பட்டி பிரதான சாலையில் உள்ள தன்னுடைய தோட்டத்தில் சீரங்கன் தங்கியிருந்தார். நள்ளிரவில் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறந்துள்ளார். அப்போது மர்ம கும்பல் ஒன்று சீரங்கன் முகத்தில் மிளகாய்ப் பொடியைத் தூவி, கழுத்தில் கயிறு கட்டி நெரித்து கொலை செய்ய முயன்றது.

m,urder

சீரங்கன் வளர்த்துவந்த நாய் விடாமல் குரைத்தது. திடீரென்று கட்டை அறுத்துக்கொண்டு மர்ம குப்பல் மீது பாய்ந்து கடித்தது. இதனால், அதிர்ச்சியடைந்த மர்ம கும்பல், கழுத்தில் கட்டிய கயிரோடு சீரங்கனை சிறிது தூரம் இழுத்துச் சென்றனர். நாய் குரைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் எழுந்து வந்துள்ளனர். இதனால் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியது. உடன் அருகிலிருந்தவர்கள் சீரங்கனை மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

admk

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர். தேர்தல் நேரம் என்பதால் அ.தி.மு.க நிர்வாகிகளும் மருத்துவமனைக்கு வந்து விசாரித்தனர். தேர்தல் காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம். எனவே, குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

admk

அதே நேரத்தில் அ.தி.மு.க-வினர் மத்தியில் வேறுவிதமான தகவலும் பரவி வருகிறது. சீரங்கனின் மருமகள் சுந்தரவள்ளிக்கு வெற்றிவாய்ப்பு குறைவாகவே உள்ளது. இதனால், மக்களின் அனுதாபத்தைப் பெற இப்படி அவர்களே செய்திருக்கிறார்கள். பொது மக்கள் வந்து காப்பாற்றவில்லை. அந்த வழியாக வந்த பால்காரர்தான் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளார். விசாரணை முழுமையாக நடந்தால் எல்லா உண்மையும் வெளிவரும்” என்கின்றனர்.