தொழில்ல நஷ்டம் வராதுன்னு சொல்ல முடியாது ஆனா அதுக்காக இப்படியா? ரத்த கண்ணீர் வடிக்கும் டாடா மோட்டார்ஸ்!

 

தொழில்ல நஷ்டம் வராதுன்னு சொல்ல முடியாது ஆனா அதுக்காக இப்படியா? ரத்த கண்ணீர் வடிக்கும் டாடா மோட்டார்ஸ்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.3,698 கோடி இழப்பை சந்தித்துள்ளது.

இந்தியாவில் வருவாய் அடிப்படையில் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனம் டாடா மோட்டார்ஸ். இந்நிறுவனம் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டு (ஏப்ரல்-ஜூன்) நிதிநிலை முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.1,938 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டு இருக்கும் என நிபுணர்கள் கணித்து இருந்தனர். ஆனால் கணிப்புகளையும் தாண்டி அந்நிறுவனத்துக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

டாடா கார் மாடல்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஏப்ரல்-ஜூன் மாத காலத்தில் ஒட்டு மொத்த அளவில் ரூ.3,698 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் டாடா மோட்டார்ஸ் ரூ.1,902 கோடி இழப்பை சந்தித்து இருந்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வருவாயும் சென்ற காலாண்டில் 7.7 சதவீதம் குறைந்து ரூ.60,830 கோடியாக உள்ளது. இதில், ஜகுவார் லேண்டு ரோவர் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் வாயிலான வருவாய் ரூ.43,746 கோடியாக (634 கோடி டாலர்) குறைந்தது.

உள்நாட்டில் கார் விற்பனை மந்தமாக இருப்பது, ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேற உள்ளதால் ஆலை மூடல் மற்றும் தாமதங்கள் போன்றவற்றால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வருவாய் கடுமையாக பாதித்துள்ளது. 

டாடா கார் மாடல்

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் முதல் முதலில் தனது காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் நிதிநிலை முடிவுகள் கவலை கொள்ளும் விதமாக இருப்பதால் இத்துறையை சேர்ந்த மற்ற நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகளும் இப்படித்தான் இருக்குமோ என்ற கலக்கத்தில் முதலீட்டாளர்கள் உள்ளனர்.