தொலை தூரத்தில் வெளிச்சம் நீ : தாமரை வரிகளில் காதல் – மாரி விஜய்

 

தொலை தூரத்தில் வெளிச்சம் நீ : தாமரை வரிகளில் காதல் – மாரி விஜய்

கவிதை, உலக இலக்கியங்களின் வேராய் விளங்குவது. தமிழ் இலக்கியத்தில் படைக்கப்படாத கவிதைகள் என்று ஒன்றுமில்லை . வெற்றி,தோல்வி காதல்,காமம்,சோகம்,புகழ்,வீரம் என எல்லாவற்றிற்குமான கவிதைகள் குவிந்து கிடக்கின்றன தமிழ் இலக்கிய உலகில்.

கவிதை, உலக இலக்கியங்களின் வேராய் விளங்குவது. தமிழ் இலக்கியத்தில் படைக்கப்படாத கவிதைகள் என்று ஒன்றுமில்லை . வெற்றி,தோல்வி காதல்,காமம்,சோகம்,புகழ்,வீரம் என எல்லாவற்றிற்குமான கவிதைகள் குவிந்து கிடக்கின்றன தமிழ் இலக்கிய உலகில் …

புதுக்கவிதை காலத்திற்கு பிறகு கவிதையின் வடிவம் உருமாற்றப்பட்டது. கவிதைகளின் வடிவம், வார்த்தைகளின் கட்டமைப்பு என எந்த இலக்கணத்திற்குள்ளும் சிக்காமல் வார்த்தைக் கோர்ப்பே கவிதையாகி விட்டதன் காலங்களில் எண்ணற்ற கவிஞர்கள் தமிழ்ச் சமூகத்திற்கு கிடைத்தனர். அதில் பாதிக்குப் பாதி வெற்றியும் பெற்றனர்.. வாலி, வைரமுத்து,பழனிபாரதி என தமிழ் இலக்கியமும், தமிழ் சினிமாவும் ஆண் கவிஞர்களால் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் ஒளவை தவிர்த்து வேறெந்த பெண் கவிஞர்களையும் பரவலாகக் காணாத தமிழ் இலக்கியம் அவரை முதன் முதலாகக் கண்டது. அவர் தான் தாமரை.

தனது முதல் கவிதைத் தொகுப்பான “ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும் ” என்ற புத்தகத்தில்

என்ன ஆச்சரியம்.!
இதயத்தின் இடத்தில்
நீ.!
இதயத்தின் வேலையை
செய்து கொண்டு…..

எப்போதும் போல 
ஜீவித்திருந்தேன்
கூடுதலாய்
இனிப்பும்….

என்று எளிய காதல் பேசிய இவரின் எழுத்துக்களை மெல்ல மெல்ல தமிழ் சினிமாவும் சிக்கெனப் பிடித்துக் கொண்டது.
காதல், தன்னம்பிக்கை, சோகம் என எல்லாவற்றையும் பற்றி எழுதும் தாமரை. காதலைப் பற்றி எழுதினால் நமக்கு தருவது தேனில் ஊற வைத்தெடுத்த எழுத்துக்கள்.
கவிதைகளின் தலைக் காவிரியான காதலை தாமரையின் பேனா வேறொரு கோணத்தில் எழுதியது. எப்படியென்றால் இதுவரை கவிதைகளை ஆண்களே ஆண்களாகவும் பெண்களாகவும் இருந்து எழுதியதை மாற்றினார். ‘ஒரு பெண்ணின் பார்வையில்’ என்ற சொல்லுக்கு வேலையில்லாதபடி காதல் உள்ளிட்ட அனைத்தையும் பெண்கள் பார்வையைத் தாண்டி அவர்களின் மனதிற்கு நெருக்கமாய் எழுதியது தான் அவரின் வெற்றி. பெண்களின் சின்ன சின்ன ஆசைகள், உணர்வுகள், கோபம், காதல் பெண்ணுலகின் அத்தனை சாராம்சங்களையும் கவிதைகளாக அல்லது சினிமா பாடல்களாக தன் எழுத்துக்களின் மூலம் உயிர்க் கொடுத்தார்‌.

இவரின் பாடல்களில் அழகிய அசுரர்களும், தேவதைகளும் அருவியாய் பெருக்கெடுத்து ஓடுவார்கள். தமிழ் சினிமாவில் காதல் வரிகள் அனேக ஆண் கவிஞர்களால் எழுதப்பட்டிருந்தாலும் பெண்ணுலகில் காதலென்பது எவ்வாறாக சிருஷ்டிக்கப்படுகிறது என்பதை இவர் எழுத்துக்கள் தான் அறிமுகப்படுத்தின. தன் வரிகளால் காதலை ததும்பச் செய்யும் கவிஞர்கள் பலருள் முதன்மையான இடம் தாமரைக்குரியது.

இவரின் பாடல்கள் எதிலும் ஆங்கிலக்கலப்போ, சமஸ்கிருத வார்த்தைகளின் பிரயோகங்களோ ஆபாச வாடையோ இருக்காது.

‘இனியவளே’ என்னும் படத்தில் தான் தனது முதல் பாடலை எழுதினார் தாமரை. ஆனால், ‘மின்னலே’ படம் தான் அவர் சினிமா வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தின் பாடல்களின் மூலம் வசீகரித்தார். குறிப்பாக வசீகரா பாடல் இன்றும் காதல் மழையில் நனைந்து கொண்டிருப்பவர்களின் ஆல் டைம் ஃபேவரைட்.

“அடை மழை வரும் அதில் நனைவோமே குளிர்க் காய்ச்சலோடு சினேகம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்….
….. எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும் சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்”.

ஒரு மழை நாளின் பின்னிரவில் கேட்டால் நிச்சயம் கிறங்கடிக்கும் இந்த வரிகள் தாமரையின் பேனாவிலிருந்து பூக்களாய் கொட்டியவை.

காமம் என்னும் உணர்வைக்கூட கொச்சையாக எழுதப்பழகிய இந்த காலத்தில் காமம் விவரிக்கும் அவரின் எழுத்துக்கள் கூட அழகியல் பேசும். அதற்கு உதாரணமாக “வல்லவன்” படத்தில் வரும் “வல்லவா எனை வெல்ல வா ” பாடலின் வரிகளைக் காட்டலாம்.

“என் நெற்றி மீது உன் வேர்வை சிந்தி
ஈரத்திலே என்னை ஆழ்த்திவிடும்
உன் மூச்சு காற்று வெப்பத்தை சேர்த்து
மூழ்கும் முன்னே எனை மீட்டுவிடும்
வெளித்தோற்றம் தரும் காதல் யாவும்
சில நாளே வரும் மாயம் ஆகும்
அடி நெஞ்சில் சென்று குடியேறும்
குணம் தானே பல யுகம் வாழும்
நீயாய் எனை இழுப்பதை அணைப்பதை
மனசுக்குள் மனசுக்குள் ரசிப்பேன்
வெளியே அது பிடிக்கலை பிடிக்கலை
என ஒரு நாடகம் நடிப்பேன்.”

காமத்திலும் அழகியல் பேசி அதன் புனிதம் கெடாமல் பார்த்துக் கொள்வதில் தாமரை அத்தனை நேர்த்தியானவர்.

காதலர்களின் கனவை எழுதித் தீர்ப்பதில் தாமரைக்கு தீராப் பிரியம் போல.. “வேட்டையாடு விளையாடு” படத்தில் வரும் ” பார்த்த முதல் நாளே” பாடலில் வரும்

“யாரும் மானிடரே இல்லாத இடத்தில் தனி வீடு கட்டிக்கொள்ள வேண்டும், நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை மரம் தோறும் செதுக்கிட வேண்டும்”
என்ற வரிகள் ஒவ்வொரு காதலர்களின் கனவை தன் எழுத்துக்கள் மூலம் நிஜமாக்கினார்.

காதலில் எவ்வளவு தூரம் எதார்த்தம் பேசினாரோ அதே அளவு கற்பனைக் கோட்டைகளையும் கட்டினார் தாமரை. “அழகிய தமிழ்மகன்” படத்தில் வரும் ‘கேளாமல் கையிலே’ பாடல் வரிகள் காதலர்களின் கற்பனை உரையாடல் போலிருக்கும்.

“கூந்தல் என்னும் ஏணி ஏறி முத்தமிட ஆசைகள் உண்டு
நெற்றி மூக்கு உதடு என்று இறங்கி வர படிகளும் உண்டு….
…….பார்வை ஒன்றால் உன்னை அள்ளி
என் கண்ணின் சிறையில் அடைப்பேன் அதில் நிரந்தரமாய் நீ இருக்க
இமைகள் வேண்டும் என்பேன்

மேற்கு திசை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சிக்கிரம் வருமோ..
தூங்கும் தேவை ஏதும் இன்றி கனவுகளும் கைகளில் விழுமோ …”
என்று கற்பனையோடு காதலையும் சேர்த்து நம்மையும் காதலில் விழச் செய்யும் அளவிற்கு எழுத்துக்களைத் தந்தார் தாமரை.

காதல் மட்டுமன்றி காதலின் வலியையும் நமக்கு நன்றாகவே உணரச்செய்தன ‘மன்னிப்பாயா’ பாடலின் வரிகள். ஒருவனின் பூரண அன்பிற்கு முன்னால் தன்னை ஒப்படைக்க விருப்பமிருந்தும் சந்தர்ப்பம், பெற்றோர்கள்,எதிர்காலம் என்னும் புறக்காரணிகளின் பொருட்டு தனக்கு நெருக்காமானவை காயப்படுத்தியதற்கு நேரடியாகவோ அல்லது மனதிற்குள் புழுங்கியோ மன்னிப்பு கேட்கும் எத்தனை எத்தனையோ பெண்களின் குரலாகவும், ஒரு பெண் ஏற்படுத்திய வலியை விட அவளின் காதல் தான் எனை கலைஞனாக மாற்றியதென்று கூறும் ஆண்களின் நம்பிக்கையாகவும் அப்பாடல் வரிகள் இருந்தன..

“ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
போவாயா காணல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்…
ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா” 
என்று பெண்களின் வலியையும்..

“கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே…

காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே…”
என ஆண்களின் நம்பிக்கையாகவும் இப்பாடல் வரிகள் இருந்தன..

இவர் வரிகளில் அதிகம் அடர்த்தி மிகுந்தது “அனல் மேலே பனித்துளி” பாடலின் வரிகள் தான். மேலோட்டமாய் பார்த்தால் அழகிய சொற்களின் தொகுப்பு போல் தெரியும் இப்பாடல் கொஞ்சம் ஆழ்ந்து வாசித்தால் அதிலிருக்கும் அடர்த்தி புரியும்.

அதிகமாய் நேசிக்கும் பெண்களால் அதே அளவு தன் காதலை மறைத்துப் பூட்டி வைத்துக் கொள்ளவும் தெரியும்..

“அதீத காதல், ஆனால் அதை யாரிடமும் பகிர முடியாத அளவிற்கு பயம்” இது தான் இப்பாடலின் அடிநாதம். இதை மனதில் கொண்டு பாடலை இயற்றியிருப்பார் தாமரை.

“சந்தித்தோமே கனாக்களில்
சில முறையா பல முறையா
அந்தி வானில் உலாவினோம்
அது உனக்கு நினைவில்லையா
இரு கரைகளை உடைத்திடவே
பெருகிடுவாய் கடல் அலையே
இரு இரு உயிர் தத்தளிக்கையில்
வழிசொல்லுமா கலங்கரையே
உனதலைகள் எனை அடித்து
கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட..”

ஆசைகளுக்கும் கனவுகளுக்கும் மனது எப்போதும் தடை விதிப்பதில்லை. அதன் போக்கில் விட்டுவிட்டு ரசிக்கும் வல்லமை வாய்ந்தது தான் மனது. தன் காதலை வெளிப்படுத்தாவிடினும் அதை கனவில் வாழ்ந்துக் கொள்வாள். எனினும், தனக்கும் தன் காதலனுக்கும் இடையிலிருக்கும் இடைவெளியை(கரையை) தகர்க்க ஒரு அலை வராமல் போய்விடுமா? ஒருவருக்கொருவர் உறவில்லாத நிலையில் அதற்கு அவளின் காதல் ஒரு வழி செய்யாமல் போய்விடுமா? தன் காதல் திருமணத்தில் முடியாதா? என்ற ஒரு ஏக்கம் இந்தப் பாடலில் சிறு வயது முதலே சூர்யா மீது தனக்கிருந்த அன்பு காதலாய் அதிகரித்து இறுதியில் திருமணத்தில் முடிவதாய் வரிகளுக்கேற்ற அழகான காட்சி வடிவம் கொடுத்திருப்பார் இயக்குநர் கௌதம். காதல் காட்சிகளை உருவாக்கவதில் கௌதம் – தாமரை இருவரின் கூட்டணியும் அசுர வல்லமை கொண்டது..

தாமரை பாடல்களில் எந்த நான்கு வரிகளை எடுத்துப் பார்த்தாலும் ஒரு சின்ன ஹைக்கூ போலிருக்கும்

” கடல் போல 
பெரிதாக நீ நின்றாய்
சிறுவன் நான் 
சிறு அலை மட்டும் தான் 
பார்க்கிறேன்” 
என்ற “தள்ளிப் போகாதே” பாடலின் வரிகள் ஹைக்கூ என்பதற்குள் கச்சிதமாய் பொருந்தும்.

யாரும் அதிகம் அறிந்திடாத அதே‌ நேரம் அழகியல் மிகுந்த தூய தமிழ் வார்த்தைகள் இவர் நமக்கு அளிக்கும் கொடை ‘சந்தியாக் கால மேகங்கள்’, ‘காட்சிப் பிழைப் போலே’, ‘காஞ்சனை’, ‘கலாபம் போலாடும்’, என்று கேட்டவுடன் சிலிர்க்க வைக்கும் சொற்களுக்கு இவருடையது.

அன்பும்,தீராக்காதலும் வழிந்தோடும் ரசனையான பாடல் வரிகளுக்கு சொந்தக்காரரான இவரின் எழுத்துக்கள் போதும் நாம் காதலைக் கொண்டாட.

காதலர்தின வாழ்த்துகள்.

எழுத்து: மாரி விஜய்