தொலைத்தொடர்பு துறைக்கு பாக்கி தொகையை முன்கூட்டியே செலுத்திய முகேஷ் அம்பானி நிறுவனம்

 

தொலைத்தொடர்பு துறைக்கு பாக்கி தொகையை முன்கூட்டியே செலுத்திய முகேஷ் அம்பானி நிறுவனம்

நிறுவனத்தின் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயில் (ஏ.ஜி.ஆர்.) அரசுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகை ரூ.195 கோடியை முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் நேற்று செலுத்தியது. இதில் இந்த மாதத்துக்கான தொகையையும் சேர்த்து ஜியோ முன்கூட்டியே செலுத்தி விட்டதாக அரசு தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் தங்களது சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயிலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவீத தொகையை மத்திய அரசுக்கு ஆண்டு உரிம கட்டணமாக செலுத்த வேண்டும். இதில் அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணம், சொத்து வருமானம் உள்ளிட்டவையும் அடங்கும். இந்நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வருவாயை குறைத்து காட்டியதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஜியோ

வழக்கை விசாரித்த  உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபரில் வழங்கி தீர்ப்பில், ஏர்டெல், வோடாபோன், மற்றும் டாடா டெலிசர்வீசஸ் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மொத்தம் ரூ.1.47 லட்சம் கோடியை ஜனவரி 23ம் (நேற்று) தேதிக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில், முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயில் (ஏ.ஜி.ஆர்.) மத்திய அரசுக்கு செலுத்த வெண்டிய நிலுகை தொகைக்காக ரூ.177 கோடியை ஒதுக்கியது. இந்நிலையில் நேற்று சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயில் அரசின் பங்கான ரூ.195 கோடியை ஜியோ செலுத்தி விட்டது. இதில், 2020 ஜனவரி மாதத்துக்கான தொகையை முன்கூட்டியே செலுத்தியது அடங்கும்.

வோடாபோன் ஐடியா, ஏர்டெல்

அதேவேளையில், ஜியோவின் முக்கிய போட்டி நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் விவகாரத்தில் மத்திய அரசுக்கு மொத்தம் ரூ.88 ஆயிரம் கோடிக்கு மேல் கொடுக்க வேண்டியது உள்ளது. அந்த தொகையை செலுத்த காலஅவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் அந்த விசாரணைக்கு வர உள்ளது.