தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி! சென்செக்ஸ் 411 புள்ளிகள் உயர்ந்தது..

 

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி! சென்செக்ஸ் 411 புள்ளிகள் உயர்ந்தது..

கடந்த சில வர்த்தக தினங்களாக சரிவு கண்டு வந்த பங்கு வர்த்தகம் இன்று ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 411 புள்ளிகள் உயர்ந்தது.

அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக சாதகமான தகவல்கள் வெளிவந்தது. அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீட்டை அதிகரித்து வருகின்றனர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களை நாளை சந்தித்து பேச உள்ளார். மேலும் சில வங்கிகள் அரசு பங்கு மூலதனம் அளிக்க உள்ள தகவல்களை அறிவித்தன. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் களை கட்டியது.

நிர்மலா சீதாராமன்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஆக்சிஸ் வங்கி, பவர் கிரீட், ஸ்டேட் வங்கி, பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எல் அண்டு டி உள்பட 26 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. கோடக்மகிந்திரா வங்கி, டைட்டன், டி.சி.எஸ். மற்றும் அல்ட்ரா சிமெண்ட் ஆகிய 4 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஆக்சிஸ் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,520 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,023 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 168 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.155.84 லட்சம் கோடியாக உயர்ந்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 411.38 புள்ளிகள் அதிகரித்து 41,575.14 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 119.25 புள்ளிகள் ஏற்றம் கண்டு 12,245.80 புள்ளிகளில் முடிவுற்றது.