தொடர் ஏமாற்றத்தில் முதலீட்டாளர்கள்! சென்செக்ஸ் 17 புள்ளிகள் குறைந்தது….

 

தொடர் ஏமாற்றத்தில் முதலீட்டாளர்கள்! சென்செக்ஸ் 17 புள்ளிகள் குறைந்தது….

தொடர்ந்து 6 வர்த்தக தினமாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகள் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றத்தை பரிசாக வழங்கியது. சென்செக்ஸ் 17 புள்ளிகள் குறைந்தது.

மாதத்தின் கடைசி வியாழன் அன்று பங்கு முன்பேர வர்த்தக கணக்குகள் முடிக்கப்படும். அதன்படி, இன்று கடைசி வியாழன் என்பதால் ஜூலை மாத பங்கு முன்பேர வர்த்தக கணக்கு முடிக்கப்பட்டது. அதனால் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தனர். மேலும் சில நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் எதிர்பார்த்தப்படி அமையாததால் பங்குகளின் விலை சரிந்தது. இது போன்ற சில காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சிறிய சரிவுடன் முடிவடைந்தது.

பங்கு வர்த்தகம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் வேதாந்தா, சன்பார்மா, இண்டஸ்இந்த் பேங்க், ஆக்சிஸ் பேங்க், பவர்கிரிட், டி.சி.எஸ். மற்றும் டெக்மகிந்திரா உள்பட 16 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. டாடா மோட்டார்ஸ், பஜாஜ் பைனான்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், யெஸ் பேங்க், என்.டி.பி.சி. மற்றும் டாடா ஸ்டீல் உள்பட14 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்குச் சந்தை வீழ்ச்சி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,082 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,353 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும் 168 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.143.29 லட்சம் கோடியாக உயர்ந்தது. நேற்று வர்த்தகம் முடிவடைந்தபோது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.143.29 லட்சம் கோடியாக இருந்தது.

வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 16.67 புள்ளிகள் குறைந்து 37,830.98 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 19.15 புள்ளிகள் இறங்கி 11,252.15 புள்ளிகளில் முடிவுற்றது.