தொடர்ந்து 9வது மாதமாக கார்கள் விற்பனை படுத்தது… மேலும் இறுகும் சிக்கல்

 

தொடர்ந்து 9வது மாதமாக கார்கள் விற்பனை படுத்தது… மேலும் இறுகும் சிக்கல்

தொடர்ந்து 9வது மாதமாக கடந்த ஜூலை மாதத்திலும் கார்கள் விற்பனை படுத்து விட்டது. இதனால் வாகன துறையின் நெருக்கடி மேலும் பெரிதாகியுள்ளது.

இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் மாதந்தோறும் பயணிகள் வாகனங்கள் விற்பனை குறித்த புள்ளிவிவரத்தை வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஜூலை மாதத்தின் பயணிகள் வாகன விற்பனை குறித்த புள்ளிவிவரத்தை சற்று நேரத்துக்கு முன்பு வெளியிட்டது. 

கார்கள்

கடந்த ஜூலை மாதத்தில் நம் நாட்டில் மொத்தம் 2,00,790 பயணிகள் வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 31 சதவீதம் குறைவாகும். மேலும், 2019 ஜூன் மாதத்தை காட்டிலும் விற்பனை 17 சதவீதம் குறைவாகும் என இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

கார் தயாரிப்பு ஆலை

தொடர்ந்து விற்பனை குறைந்து வருவதால் பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிப்பை குறைத்து வருகின்றன. பல ஆயிரம் பேர் வேலை வாய்ப்பை இழந்து விட்டனர். வாகன துறைக்கு புத்துயிர் அளிக்க ஜி.எஸ்.டி. வரி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசிடம் வாகன தயாரிப்பாளர்கள் அண்மையில் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.