தொடர்ந்து 7 வாரங்களாக அடி மேல் அடி…. இந்த வாரமாவது தப்பிக்குமா பங்கு வர்த்தகம்? பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு….

 

தொடர்ந்து 7 வாரங்களாக அடி மேல் அடி…. இந்த வாரமாவது தப்பிக்குமா பங்கு வர்த்தகம்? பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு….

தொடர்ந்து கடந்த 7 வாரங்களாக பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்த நிலையில், இந்த வார பங்கு வர்த்தகத்தில் கொரோனா வைரஸ் நிலவரம், ஒபெக் நாடுகளின் கூட்டமைப்பு சந்திப்பு உள்ளிட்டவை தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

மகாவீர் ஜெயந்தி மற்றும் புனித வெள்ளி முன்னிட்டு இந்த வாரம் பங்குச் சந்தைகளுக்கு 6 மற்றும் 10ம் தேதியன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வாரம் 3 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெறும். கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் இந்த வாரமும் வைரஸ் நிலவரம் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கொரோனா வைரஸ்

அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்ட முதலீட்டை திரும்ப பெற்றுவருகின்றனர். அவர்கள் மீண்டும் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய தொடங்கினால் பங்கு வர்த்தகத்தின் போக்கு மாறும். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பும் பங்கு வர்த்தகத்தின் போக்கினை முடிவு செய்யும் முக்கிய காரணியாக இருக்கும்.

பெட்ரோலிய கச்சா எண்ணெய்

3 வார ஊரடங்கால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் சரிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோலிய உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நாளை வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆலோசனை நடத்துகின்றனர். இந்த கூட்டத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலவரங்களும் இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை முடிவு செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.