தொடர்ந்து 4 நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தைகள்

 

தொடர்ந்து 4 நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தைகள்

தொடர்ந்து 4 நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 69 புள்ளிகள் உயர்ந்தது.

2018-19ம் நிதியாண்டின் பொருளாதார ஆய்வறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல சாதகமான விஷயங்கள் இருந்தன. இதனால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. இருப்பினும், நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால் முதலீட்டாளர்கள் அதிக எச்சரிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். இதனால் பங்குச் சந்தைகளில் பெரிய அளவில் ஏற்றம் ஏற்படவில்லை.

பங்கு வர்த்தகம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில் பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், கோடக்பேங்க், ஹீரோமோட்டோகார்ப், ஏசியன் பெயிண்ட்ஸ், இந்துஸ்தான் யூனிலீவர் உள்பட 20 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், யெஸ் பேங்க், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், வேதாந்தா, சன்பார்மா உள்பட 10 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,245 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,201 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும், 173 நிறுவன பங்குகளின் விலை எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. இச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.153.58 லட்சம் கோடியாக உயர்ந்தது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.153.15 லட்சம் கோடியாக இருந்தது.

பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 68.81 புள்ளிகள் அதிகரித்து 39,908.06 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 30 புள்ளிகள் ஏற்றம் கொண்டு 11,946.75 புள்ளிகளில் முடிவுற்றது.