தொடர்ந்து 4வது நாளாக லாபத்தை அள்ளிய முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 997 புள்ளிகள் உயர்ந்தது.

 

தொடர்ந்து 4வது நாளாக லாபத்தை அள்ளிய முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 997 புள்ளிகள் உயர்ந்தது.

தொடர்ந்து 4வது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 997 புள்ளிகள் உயர்ந்தது.

கோவிட்-19 சிகிச்சைக்கான சோதனையில் சாத்தியமான முன்னேற்றங்கள் கிடைத்துள்ளது என்ற செய்தி முதலீட்டாளர்களின் உணர்வை அதிகரித்தது. மேலும், சர்வதேச லாக்டவுனை படிப்படியாக தளர்த்துவது பொருளாதாரத்தை மீட்க உதவும் என நம்பிக்கையும் முதலீட்டாளர்களின் உணர்வை மேலும் அதிகரித்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு உயர்ந்தது. பல முன்னணி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் குறித்த எதிர்பார்ப்புகள் போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது.

ஓ.என்.ஜி.சி.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஓ.என்.ஜி.சி., எச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஹீரோமோட்டோகார்ப், டி.சி.எஸ்., என்.டி.பி.சி. மற்றும் இன்போசிஸ் உள்பட 26 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், சன்பார்மா, இந்துஸ்தான் யூனிலீவர், இண்டஸ்இந்த் வங்கி மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகிய 4 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சன்பார்மா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,343 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,092 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 171 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.129.39 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று மட்டும் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.3.17 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 997.46 புள்ளிகள் உயர்ந்து 33,717.62 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 306.55 புள்ளிகள் ஏற்றம் கண்டு 9,859.90 புள்ளிகளில் நிலைகொண்டது.