தொடர்ந்து 4வது தினமாக சரிவை சந்தித்த நிப்டி! சென்செக்ஸ் 174 புள்ளிகள் வீழ்ச்சி!

 

தொடர்ந்து 4வது தினமாக சரிவை சந்தித்த நிப்டி! சென்செக்ஸ் 174 புள்ளிகள் வீழ்ச்சி!

தொடர்ந்து 4வது வர்த்தக தினமாக இன்றும் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி சரிந்தது. சென்செக்ஸ் 174 புள்ளிகள் குறைந்தது.

இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனங்களின் நிதிநிலை நிலவரத்தில் பெரிய முன்னேற்றம் இருக்காது என கணிப்புகள் வெளியாகியுள்ளது. இது தவிர மத்திய பட்ஜெட் தாக்கம் இன்னும் முடியவில்லை. அமெரிக்க பொருளாதாரத்தில் மந்தநிலை நிலவுகிறது. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் கடும் பின்னடைவை சந்தித்தது.

பங்கு வர்த்தகம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில் யெஸ் பேங்க், சன்பார்மா, கோடக்பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பவர்கிரிட், எச்.டி.எப்.சி. வங்கி உள்பட 9 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம் பஜாஜ்பைனான்ஸ், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், எல் அண்டு டி, மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட 21 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 946 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,496 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும் 142 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.147.04 லட்சம் கோடியாக குறைந்தது. நேற்று வர்த்தகத்தின் முடிவில் நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.148.02 லட்சம் கோடியாக இருந்தது. 

பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 173.78 புள்ளிகள் குறைந்து 38,557.04 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 57 புள்ளிகள் சரிந்து 11,498.90 புள்ளிகளில் முடிவுற்றது.