தொடர்ந்து 2வது நாளாக பங்குச் சந்தையில் நஷ்டத்தை சந்தித்த முதலீட்டாளர்கள்…..சென்செக்ஸ் 188 புள்ளிகள் வீழ்ச்சி…..

 

தொடர்ந்து 2வது நாளாக பங்குச் சந்தையில் நஷ்டத்தை சந்தித்த முதலீட்டாளர்கள்…..சென்செக்ஸ் 188 புள்ளிகள் வீழ்ச்சி…..

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. சென்செக்ஸ் 188 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

மாருதி சுசுகி, இண்டிகோ உள்பட பல நிறுவனங்களின் கடந்த டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது. இருப்பினும், சீனாவின் பரவி வரும் கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. அதனால் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது.

எச்.டி.எப்.சி.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், எச்.டி.எப்.சி., பஜாஜ் பைனான்ஸ், சன்பார்மா, எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் ஹீரோமோட்டோகார்ப் உள்பட 11 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மாருதி, ஐ.டி.சி. மற்றும் நெஸ்லே இந்தியா உள்பட 19 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 

பார்தி ஏர்டெல்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 994 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,540 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 172 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.158.41 லட்சம் கோடியாக சரிந்தது. ஆக, இன்று ஒரே நாளில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.83 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 188.26 புள்ளிகள் சரிந்து 40,966.86 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 63.20 புள்ளிகள் குறைந்து 12,055.80 புள்ளிகளில் முடிவுற்றது.