தொடர்ந்து 2வது நாளாக சரிவு கண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 383 புள்ளிகள் குறைந்தது….

 

தொடர்ந்து 2வது நாளாக சரிவு கண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 383 புள்ளிகள் குறைந்தது….

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் 383 புள்ளிகள் குறைந்தது.

சர்வதேச பொருளாதார மந்தநிலை மீண்டும் ஏற்படும் என்ற அச்சம் காரணமாக உலக பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஆட்டம் கண்டது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் கடன் சுமை அதன் சந்தை மதிப்பை காட்டிலும் பல மடங்கு அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது போன்ற காரணங்களால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் படுத்தது. 

பங்கு வர்த்தகம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவனங்களில், சன்பார்மா, வேதாந்தா, ஏசியன் பெயிண்ட்ஸ், இன்போசிஸ் மற்றும் மாருதி உள்பட 9 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், யெஸ் பேங்க், ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் டாடா மோட்டார்ஸ் உள்பட 21 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 898 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,582 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும், 158 நிறுவன பங்குகளின் விலை எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.139.88 லட்சம் கோடியாக குறைந்தது. நேற்று வர்த்தகம் முடிவடைந்த போது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.140.57 லட்சம் கோடியாக இருந்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 382.91 புள்ளிகள் குறைந்து 37,068.93 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 97.80 புள்ளிகள் சரிந்து 10,948.30 புள்ளிகளில் நிலை கொண்டது.