தொடர்ந்து அம்பலமாகும் புஷன் பவர் நிறுவனத்தின் கடன் மோசடி! இந்த முறை அலகாபாத் வங்கி

 

தொடர்ந்து அம்பலமாகும் புஷன் பவர் நிறுவனத்தின் கடன் மோசடி! இந்த முறை அலகாபாத் வங்கி

புஷன் பவர் அண்டு ஸ்டீல் நிறுவனம் முதலில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் மோசடியில் ஈடுபட்ட தகவல் வெளிவந்தது. தற்போது அலகாபாத் வங்கியிலும் அந்த நிறுவனம் கடன் மோசடியில் ஈடுபட்ட தகவல் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுத்துறை வங்கிகள் நிறுவனங்களுக்கு கடனை கொடுத்து விட்டு வசூலிக்க முடியாமல் திணறி வருகின்றன. அதிலும் குறிப்பாக பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அந்த வங்கியில்தான் வைர வியாபாரி நீரவ் மோடியும் அவரது மாமா சோக்சியும் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடனை வாங்கி விட்டு வெளிநாட்டு தப்பியோடினர். இந்த விவகாரமே முடிவுக்கு வராத நிலையில், புஷன் பவர் அண்டு ஸ்டீல் நிறுவனமும் அந்த வங்கிக்கு பட்டை நாமம் போட்ட தகவல் அண்மையில் வெளியானது.

பஞ்சாப் நேஷனல் வங்கி

புஷன் பவர் அண்டு ஸ்டீல் நிறுவனம் சுமார் ரூ.3,800 கோடி கடன் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக சமீபத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி தகவல் வெளியிட்டது. இந்நிலையில், புஷன் பவர் அண்டு ஸ்டீல் நிறுவனம் மற்றொரு வங்கியையும் ஏமாற்றிய விவகாரம் வெளியே வந்துள்ளது. இந்தமுறை புஷன் பவர் அண்டு ஸ்டீல் நிறுவனம் அலகாபாத் வங்கியில் கடன் மோசடி செய்த தகவல் வெளியாகியுள்ளது. 

அலகாபாத் வங்கி

புஷன் பவர் அண்டு ஸ்டீல் நிறுவனம் ரூ.1,775 கோடி கடன் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த தகவலை ரிசர்வ் வங்கிக்கு தெரிவித்துள்ளதாகவும் பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில் அலகாபாத் வங்கி குறிப்பிட்டுள்ளது. வரும் நாட்களில் மேலும் பல வங்கிகளில் புஷன் பவர் அண்டு ஸ்டீல் நிறுவனம் கடன் மோசடியில் ஈடுபட்ட தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.