தொடரும் காளையின் வெற்றி! சென்செக்ஸ் 130 புள்ளிகள் உயர்ந்தது…

 

தொடரும் காளையின் வெற்றி! சென்செக்ஸ் 130 புள்ளிகள் உயர்ந்தது…

தொடர்ந்து 2வது நாளாக இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 130 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும், கூடுதல் வரி விதிக்கப்போவதாக ஐரோப்பிய யூனியனை அமெரிக்கா திடீரென மிரட்டியது. இது சர்வதேச பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது.

பங்கு வர்த்தகம்

இருப்பினும், பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகளால் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தனர். மேலும், அன்னிய முதலீட்டாளர்களும் இந்திய நிறுவன பங்குகளில் தொடர்ந்து முதலீடு செய்து வருவதால் பங்கு வர்த்தகம் நன்றாக இருந்தது. 

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில் ஓ.என்.ஜி.சி., எச்.டி.எப்.சி. நிறுவனம், பார்தி ஏர்டெல், இன்போசிஸ் மற்றும் மாருதி உள்பட 19 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம், யெஸ் பேங்க், டாடா மோட்டார்ஸ், சன்பார்மா, பஜாஜ் ஆட்டோ உள்பட 11 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 

ஷேர் மார்க்கெட்

மும்பை பங்குச் சந்தையில் 1,146 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,344 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. அதேவேளையில்  155 நிறுவன பங்குகளின் விலையில் மாற்றம் இன்றி முடிவடைந்தது. இச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.153.04 லட்சம் கோடியாக உயர்ந்தது. இது நேற்று ரூ.152.55 லட்சம் கோடியாக இருந்தது.

வர்த்தகத்தின் இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 129.98 புள்ளிகள் உயர்ந்து 39,816.48 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 44.70 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,910.30 புள்ளிகளில் நிலை கொண்டது.