தொடரும் ஆன்லைன் ஷாப்பிங் மோசடி: ஹெட்போன் ஆர்டர் செய்த பிரபல நடிகை சோனாக்ஷி சின்ஹாவுக்கு என்ன கிடைத்தது தெரியுமா?

 

தொடரும் ஆன்லைன் ஷாப்பிங் மோசடி: ஹெட்போன் ஆர்டர் செய்த பிரபல நடிகை சோனாக்ஷி சின்ஹாவுக்கு என்ன கிடைத்தது தெரியுமா?

நடிகை சோனாக்ஷி சின்ஹா அமேசானில் விலையுயர்ந்த ஹெட்போன் ஒன்றினை ஆர்டர் செய்து ஏமாந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை: நடிகை சோனாக்ஷி சின்ஹா அமேசானில் விலையுயர்ந்த ஹெட்போன் ஒன்றினை ஆர்டர் செய்து ஏமாந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்யும் முறை உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. குறிப்பாக ஆன்லைனில் கிடைக்காத பொருட்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு எல்லா பொருட்களும் கடைக்கு சென்று வாங்காமலே நம் வீடு தேடி வருகிறது. ஆனால் அதே சமயம் ஆன்லைன் நிறுவனங்கள் நீண்ட நாட்களாக ஆர்டர் செய்யும் பொருட்களுக்கு பதிலாக போலியான பொருள்களை வழங்கி வருவதாக ஒரு பெரும் குற்றச்சாட்டு பல இடங்களில் உலவி வந்தது. ஆனால் அது பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை தேவயாணியின் தம்பியும் நடிகருமான நகுல், பிளிப்கார்ட்டில் ஐபோன் ஆர்டர் செய்திருந்தார். ஆனால் அவருக்கு வந்ததோ போலி ஐபோன். இதையடுத்து அவர் அந்த தகவலை சமூகவலைத்தளத்தில் ஐபோனுடன் வீடியோ எடுத்து பதிவிட்டார். பின்னர் இந்த செய்தி பெரிய அளவில் வைரலானது. ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் போலி முகம் அனைவருக்கும் அம்பலமானது.  இதையடுத்து  அவர் செலுத்திய பணத்தை ஃப்ளிப்கார்ட்  நிறுவனம் திருப்பி வழங்கியது.

இந்நிலையில் தற்போது, நடிகை சோனாக்ஷி சின்ஹா அமேசானில் விலையுயர்ந்த ஹெட்போன் ஒன்றினை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு பார்சலில் இரும்புத்துண்டு வந்துள்ளது. இதையடுத்து கடும் கோபமடைந்த அவர், தனது டிவிட்டர் பக்கத்தில் அதனைப் புகைப்படமெடுத்து பதிவிட்டுள்ளார். மேலும் உங்கள் வாடிக்கையாளர் சேவையும் தேவையில்லை, அது அதை விட மிகவும் மோசமானது எனச் சரமாரியாக அமேசான் நிறுவனத்தை திட்டித் தீர்த்துள்ளார். 

 

தொடர்ச்சியாக நடந்தேறி வரும் இதுபோன்ற சம்பவங்கள் ஆன்லைன் வணிகத்தின் மீது பெரிய அதிருப்தியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.