தொடக்கப்பள்ளிகளை தொடர்ந்து காஷ்மீரில் இன்று முதல் நடுநிலைப்பள்ளிகள் மீண்டும் திறப்பு…..

 

தொடக்கப்பள்ளிகளை தொடர்ந்து காஷ்மீரில் இன்று முதல் நடுநிலைப்பள்ளிகள் மீண்டும்  திறப்பு…..

கடந்த திங்கட்கிழமை தொடக்கப்பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று முதல் நடுநிலைப்பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக காஷ்மீர் முதன்மை செயலளர் ரோகித் கன்சால் தெரிவித்தார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 5ம் தேதி நீக்கியது. இதனால் அங்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். செல்போன், லேண்ட்லைன் மற்றும் இன்டர்நெட் என அனைத்து  தொலைத்தொடர்பு சேவைகளும் துண்டிக்கப்பட்டன. மேலும், பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

காஷ்மீரில் பள்ளிகள் திறப்பு

தற்போது காஷ்மீரில் கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டு வருகின்றன. தற்போது லேண்ட் லைன் இணைப்புகள் கொடுக்கப்பட்டு விட்டது. அரசு பணியாளர்கள் பணிக்கு திரும்பி விட்டனர். கடந்த திங்கட்கிழமை முதல் ஜம்மு அண்டு காஷ்மீரில் பல பகுதிகளில் தொடக்க பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இந்நிலையில் இன்று முதல் அந்த பகுதிகளில் நடுநிலை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக காஷ்மீர் அரசு நிர்வாகம் கூறியது.

ஜம்மு அண்டு காஷ்மீரின் முதன்மை செயலர் (திட்டமிடுதல், மேம்பாட்டு) ரோகித் கன்சால் இது தொடர்பாக கூறியதாவது: நேற்று (திங்கட்கிழமை) தொடக்கநிலை பள்ளிகளை திறந்தோம்.  இன்று (செவ்வாய்க்கிழமை) நிலவரத்தை ஆய்வு செய்தபோது பெற்றோர்களிடமிருந்து ஊக்கமளிக்கும் வகையில் பதில் கிடைத்தது. இதனால் அவர்களின் கோரிக்கையை ஏற்று நாளை (இன்று) முதல் தொடக்கநிலை பள்ளிகள் திறக்கப்பட்ட பகுதிகளில் நடுநிலை பள்ளிகள் திறக்கப்படும்.

பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்

கடந்த திங்கட்கிழமை பள்ளியில் மாணவர்கள் வருகை குறைவாகத்தான் இருந்தது. ஆனால் இன்று( நேற்று) மாணவர்கள் வருகை அதிகமாக இருந்தது. காஷ்மீரில் உள்ள 111 காவல் நிலையங்களில் 50 நிலையங்களின் எல்லை பகுதிகளில் பகல் நேரத்தில் எந்தவித கட்டுப்பாடுகள் இல்லை. மொத்தமுள்ள 22 மாவட்டங்களில் 12 மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பியதாக எங்களிடம் அறிக்கை உள்ளது. 

மொத்தமுள்ள 96 லேண்ட் லைன் இணைப்புகளில் தற்போது 73 ஆயிரம் இணைப்புகள் செயல்பாட்டுக்கு வந்து விட்டது. எஞ்சிய இணைப்புகளும் எவ்வளவு விரைவாக கொடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வழங்கப்படும். கடந்த 12 நாட்களில் காஷ்மீர் மக்கள் ஏ.டி.எம்.களில் ரூ.800 கோடி எடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.