தேவை குறைந்தது….. இறக்குமதியும் சரிந்தது…. ஆனால் தங்கத்தின் விலை மட்டும் கூடிப்போச்சு

 

தேவை குறைந்தது….. இறக்குமதியும் சரிந்தது…. ஆனால் தங்கத்தின் விலை மட்டும் கூடிப்போச்சு

கடந்த நிதியாண்டில் உள்நாட்டில் தங்கத்தின் தேவை குறைவாக இருந்ததால் இறக்குமதியும் சரிந்தது. ஆனால் விலை மட்டும் 36 சதவீதம் அதிகரித்தது.

நம் நாட்டில் தங்கம் உற்பத்தி பெயரளவுக்குதான் நடைபெறுகிறது. இதனால் உள்நாட்டு தங்கத்தின் தேவை இறக்குமதி வாயிலாகத்தான் பூர்த்தி செய்யப்படுகிறது. கடந்த நிதியாண்டில் முதல் காலண்டைக் தவிர்த்து மற்ற காலாண்டுகளில் தங்கத்தின் தேவை குறைவாகவே இருந்தது. இதனால் தங்கத்தின் இறக்குமதியும் குறைந்தது. கடந்த நிதியாண்டில் 559.6 டன் அளவுக்கே தங்கம் இறக்குமதியாகி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தங்க கட்டிகள்

2018-19ம் நிதியாண்டில் 775.4 டன்கள் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. ஆக சென்ற நிதியாண்டில் முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் சுமார் 216 டன்கள் அளவுக்கு தங்கம் இறக்குமதி குறைந்திருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதியன்று மத்திய அரசு தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீது 12.5 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. அது முதல் தங்கத்தின் தேவை குறைய தொடங்கியது. 

தங்க பிஸ்கட்கள்

அதேசமயம், அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் பதற்றம் மற்றும் அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போர் போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. 2018-19ம் நிதியாண்டில் 10 கிராம் தங்கம் ரூ.31,640க்கு விற்பனையானது. ஆனால் சென்ற நிதியாண்டில் (2019-2020) 10 கிராம் தங்கம் ரூ.43 ஆயிரத்துக்கு விற்பனையானது. ஆக முதலீடு அடிப்படையில் பார்த்தால் தங்கம் கடந்த நிதியாண்டில் சுமார் 36 சதவீதம் அளவுக்கு லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ளது.