தேர்வு சீர்திருத்தங்களை ரத்து செய்ய அண்ணா பல்கலைக் கழகம் மறுப்பு

 

தேர்வு சீர்திருத்தங்களை ரத்து செய்ய அண்ணா பல்கலைக் கழகம் மறுப்பு

அண்ணா பல்கலைக்கழக புதிய தேர்வு சீர்திருத்தங்களை ரத்து செய்ய முடியாது என துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக புதிய தேர்வு சீர்திருத்தங்களை ரத்து செய்ய முடியாது என துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 2017-18 ஆம் கல்வியாண்டு முதல் புதிய தேர்வு விதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதன்படி முதல் பருவத் தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் ஒரு மாணவர் தோல்வியடைந்தால், அந்த பாடத்திற்கான தேர்வை அவர் மூன்றாவது பருவத்தில் மட்டும் தான் எழுத முடியும். அதேபோல், எந்த பருவத் தேர்வில் ஒரு மாணவர் தோல்வியடைந்தாலும், அதற்கு அடுத்த பருவத்தில் அப்பாடத் தேர்வை அவரால் எழுத முடியாது. மாறாக ஓராண்டு கழித்து வரும் பருவத்தில் தான் அவர் தேர்வெழுத முடியும். அதுமட்டுமின்றி, ஒரு பருவத்தில் அதற்குரிய தாள்களுடன், கடந்த காலத்தில் தோல்வியடைந்த  தாள்களில் அதிகபட்சமாக 3 தாள்களை மட்டும் தான் கூடுதலாக எழுத முடியும்.

இதற்கு மாணவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த தேர்வு சீர்திருந்தங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமையன்று மாணவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், உயர்கல்வித்துறை செயலாளர், அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கானது பிப்ரவரி 28-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக புதிய தேர்வு சீர்திருத்தங்களை ரத்து செய்ய முடியாது. பொறியியல் கல்லூரி மாணவர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது என துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்