தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம்; பாஜக-வுடன் கூட்டணி குறித்து ஓபிஎஸ் கருத்து

 

தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம்; பாஜக-வுடன் கூட்டணி குறித்து ஓபிஎஸ் கருத்து

தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் என பாஜக-வுடனான கூட்டணி குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்

சென்னை: தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் என பாஜக-வுடனான கூட்டணி குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதில், ஆட்சியை கைப்பற்றி மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏற பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இந்த சூழலில், தமிழக பாஜக நிர்வாகிகளிடம் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தில் கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கின்றன. பழைய நண்பர்களுக்கும், கட்சிகளுக்கும் பாஜக-வின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்றார்.

தமிழகத்தை பொறுத்தவரை மிகப்பெரிய கட்சிகளான அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளுடனுமே இதற்கு முன்னர் கூட்டணி அமைத்து பாஜக தேர்தலை சந்தித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் தலைவர் ராகுலை திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்துள்ளார். இதன் மூலம் திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது.

எனவே, பழைய நண்பர்களை வரவேற்க தயார் என கூட்டணிக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருப்பது அதிமுக-வுக்கு தான் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். ஏற்கனவே, அதிமுக-வை பாஜக பின்னின்று இயக்குகிறது எனவும், அதிமுக-வை வைத்து கொல்லைப்புறமாக தமிழகத்தில் கால் பதிக்க பாஜக திட்டமிட்டு வருகிறது எனவும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வந்த நிலையில், பிரதமர் மோடியின் இந்த அழைப்பு எதிர்வரவுள்ள மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியை உறுதி படுத்தும் விதமாக இருக்கிறது எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம், பிரதமர் மோடியின் அழைப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கடந்த 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-வுடன் அதிமுக கூட்டன்னி அமைத்ததை சுட்டிக் காட்டி, தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்றார்.