தேர்தலுக்கு 4 நாட்களே உள்ள நிலையில் காங்கிரசுக்கு வேட்டு வைத்த முன்னாள் தலைவர்

 

தேர்தலுக்கு 4 நாட்களே உள்ள நிலையில் காங்கிரசுக்கு வேட்டு வைத்த முன்னாள் தலைவர்

அரியானாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக் ஜன்தா கட்சிக்கு அம்மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அசோக் தன்வார் ஆதரவு கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியானாவின் காங்கிரஸில் பிரபலமாக இருந்தவர் அசோக் தன்வார். 2014 முதல் கடந்த மாதம் வரை அவர் அம்மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வந்தார். காங்கிரஸின் முன்னாள் முதல்வர் புபிந்தர் சிங் ஹூடாவுக்கும், அவருக்கும் முட்டல் மோதல் இருந்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் அது பெரிதாக வெடித்தது. இதன் தொடர்ச்சியாக ஹூடாவின் மிரட்டலுக்கு பயந்து காங்கிரஸ் மேலிடம் அசோக் தன்வாரை மாநில தலைவர் பதவியிலிருந்து நீக்கி விட்டு வேறு ஒருவரை கடந்த மாதம் நியமனம் செய்தது.

அசோக் தன்வார்

இது அசோக் தன்வாருக்கு கடும் கோபத்தை கிளப்பியது. இருப்பினும் அமைதி காத்த அசோக் தன்வார், எதிர்வரும் அரியானா சட்டப்பேரவை தேர்தலில் தனது ஆதரவாளர்களுக்கு ஹூடா சீட் கொடுக்காததால் அவர் கோபத்தின் உச்சிக்கே சென்றார். இதனை தொடர்ந்து அண்மையில் சோனியா காந்தியின் இல்லத்துக்கு வெளியே தேர்தலில் சீட் முறைகேடாக வழங்கப்படுவதாக குற்றச்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். இது நடந்த சில நாட்களுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் இது தொடர்பாக சோனியா காந்திக்கு 4 பக்க கடிதத்தையும் அனுப்பினார்.

ஜனநாயக் ஜன்தா கட்சி

இந்நிலையில், துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக் ஜன்தா கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அசோக் தன்வார் அறிவித்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எனது தொண்டர்கள் ஜனநாயக் ஜன்தா கட்சிக்கு ஆதரவு அளிக்க விரும்புகின்றனர். அதனால் நாங்கள் அதனை செய்கிறோம். துஷ்யந்த் சவுதாலா இந்த மாநிலத்தின் முதல்வராக வரவேண்டும். காங்கிரஸ் கட்சியில் சில திமிர்பிடித்தவர்களால் தொண்டர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அந்த திமிர்பிடித்தவர்களின் இறுமாப்பு சிதைக்கப்பட வேண்டும். எதிரிகளுக்காக சுரங்கத்தை ஏற்படுத்தியுள்ளேன். இது அவர்கள் மீதான எனது முதல் சர்ஜிக்கல் ஸ்டிரைக் என தெரிவித்தார்.