தேமுதிக மீது பொங்கும் திடீர் பாசம்… அத்து விடப்படும் பாமக… அதிமுக அட்ராசிட்டி..!

 

தேமுதிக மீது பொங்கும் திடீர் பாசம்… அத்து விடப்படும் பாமக… அதிமுக அட்ராசிட்டி..!

’தேர்தல் கவனிப்புகளில்’ தேமுதிகவிற்கு அவர் அதிக முன்னுரிமை தர, நொந்துபோன பாட்டாளி சொந்தங்கள் விஷயத்தை தைலாபுரத்திற்குக் கொண்டு போயிருக்கிறார்கள்.

இடைத் தேர்தலுக்கு இன்னும் 11 தினங்களே உள்ள நிலையில்  தேர்தலுக்கு ஆதரவு வாக்குகள் மட்டும் போதாது, சில உள்ளடி வேலைகளும் அவசியம் என்பதை அனுபவ ரீதியாக அறிந்துள்ள திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சத்தமில்லாமல் அந்த காரியங்களைச் செய்யத் தொடங்கியுள்ளன.

இதன் ஒரு பகுதியாக கூட்டணியில் பாமக இல்லாத நிலையில் வன்னியர் இன வாக்குகளை முடிந்தவரை வளைக்க திமுக தரப்பில் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாமகவில் அதிருப்தியில் இருக்கும் கீழ்மட்ட நிர்வாகிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களை சந்தித்துப் பேசும் வேலையை திமுகவினர் கடந்த சில நாட்களாக சைலண்டாக செய்து வருகின்றனர்.

edappadi

ஜெகத்ரட்சகன், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமையிலான பிரத்யேக டீம் ஒன்று, இந்த ஸ்பெஷல் அசைன்மெண்டுடன் பாட்டாளி சொந்தங்களைக் குறி வைத்து தொகுதி முழுக்க வலம் வந்து கொண்டிருக்கிறது. நாளைய வாக்குறுதிகள் தவிர, இப்போதைக்குக் கொஞ்சம் ’கவனிப்பும்’ திமுக தரப்பில் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

திமுகவின் இந்த அண்டர்கிரவுண்ட் வேலையைக் கண்டு ஆடிப்போன அதிமுக, இப்போது அதே ரூட்டில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது. திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க கரன்சி அஸ்திரத்தை பல திசைகளிலும் ஏவி விட்டிருக்கிறது ஆளும் கட்சி.

stalin

அமைச்சர் சண்முகத்தின் சகோதரர் ராதாகிருஷ்ணனிடம் இந்த வேலை ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. குடும்ப துக்க நிகழ்வால் இரண்டு மூன்று நாட்கள் சைலண்டாக இருந்த ராதாகிருஷ்ணன் இன்று காலை முதல் இழுப்புப் பணியை முழுவீச்சில் தொடங்கியுள்ளதாக சொல்கிறார்கள்.

எதிர்பார்ப்பிற்கும் மேலாக ராதாகிருஷ்ணன் அள்ளிவிடுவதால், சிறுத்தைகள் சிலர் ஒதுங்கி வரத் தொடங்கி இருப்பதாக அந்தக் கட்சியினரே ஒத்துக் கொள்கின்றனர். இது பற்றி கட்சித் தலைவர் திருமாவளவனுக்குப் புகார்கள் பறந்துள்ளதாகவும் பேச்சு.

இது ஒருபுறமென்றால், அமைச்சர் சண்முகம் தேமுதிகவிடம் காட்டும் திடீர் பாசம், பாமகவினரை கொதிக்கச் செய்துள்ளது. விக்கிரவாண்டியில் அதிமுக வென்றால் அது பாமக தயவால் என்பதாக இருக்கக் கூடாது. தொலைநோக்குப் பார்வையில் அது தனது அரசியல் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என சண்முகம் எண்ணுகிறாராம்

edappadi

இதனால் ’தேர்தல் கவனிப்புகளில்’ தேமுதிகவிற்கு அவர் அதிக முன்னுரிமை தர, நொந்துபோன பாட்டாளி சொந்தங்கள் விஷயத்தை தைலாபுரத்திற்குக் கொண்டு போயிருக்கிறார்கள். அவர் ’’நான் முதல்வர் எடப்பாடி கிட்ட பேசி சரி பண்ணச் சொல்றேன்’’ என உறுதியளித்திருக்கிறார். இரு தரப்புகளிலும் அரங்கேறி வரும் இத்தகைய உள்ளடி வேலைகளால் விக்கிரவாண்டி தேர்தல் களம், இதுவரை இல்லாத கொதி நிலையை எட்டியிருக்கிறது.