தேசிய நல்லாசிரியர்கள் தினம்; தலைவர்கள் வாழ்த்து

 

தேசிய நல்லாசிரியர்கள் தினம்; தலைவர்கள் வாழ்த்து

டெல்லி: தேசிய நல்லாசிரியர்கள் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சிறந்த ஆசிரியராக விளங்கியவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதியை ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் தேசிய நல்லாசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தேசிய நல்லாசிரியர் தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ராம்நாத் கோவிந்த் (குடியரசுத் தலைவர்):

நமது சிறந்த ஆசான்கள் நமது தேசத்தை கட்டமைக்க நமக்கு வழிகாட்டட்டும்; உலகம் முழுவதும் நல்லறிவு, சமாதானம், இணக்கம் தழைத்தோங்க ஆசிரியர்கள் உதவ வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்.

நரேந்திர மோடி (பிரதமர்):

ஆசிரியர் தின சிறப்பு நாளில் ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இளம் மனதை வடிவமைப்பதிலும், நமது நாட்டை கட்டமைப்பதிலும் முக்கிய அபங்கை ஆசிரியர்கள் வகிக்கிறார்கள். தனித்துவமான ஆசிரியரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு தலை வணங்குகிறேன்.

பன்வாரிலால் புரோஹித் (தமிழக ஆளுநர்):

ஆசிரியர் பணியில் ஈடுபட்டுள்ளோரின் விலைமதிப்பில்லாத பங்களிப்பானது சமூகத்தாலும், மாநிலத்தாலும் இந்தத் தினத்தின் போது அங்கீகரிக்கப்படுகிறது. மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் திறன்கள், ஒழுக்கம், அறிவு, நலன்கள் ஆகியவற்றை உயர்த்துவதில் அளப்பரிய பணியை ஆசிரியர்கள் ஆற்றி வருகிறார்கள். ஆசிரியர்களுக்கு இந்தத் தினத்தில் நமது மரியாதையையும், மதிப்பையும் அளித்திடுவோம்.

எடப்பாடி பழனிசாமி (தமிழக முதல்வர்):

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக விளங்கிடும் கல்வியை இளம் தலைமுறையினருக்கு கற்பித்து, அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கிடும் ஆசிரியப் பெருமக்களின் சேவை மென்மேலும் சிறக்க வேண்டுமென வாழ்த்தி, அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மு..ஸ்டாலின் (திமுக தலைவர்):

கல்வி வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி, நாட்டின் முன்னேற்றத்துக்கு வித்திடும் அறிவுசார்ந்த இளைஞர் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு திமுக சார்பில் நல் வாழ்த்துகள். ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை தரமான கல்வியை வழங்கிட தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து, அறிவு மணிகளைக் கோர்த்தெடுத்து வருங்கால தலைமுறையை உருவாக்கும் மாமணிகளாகத் திகழும் தியாக உணர்வுமிக்க ஆசிரியர்களை இந்த நாடே ஓரணியில் நின்று மனமார வாழ்த்துகிறது.