தேசியக் கொடி மீதான தல தோனியின் பற்று; மற்றொரு நெகிழ்ச்சி சம்பவம்-வீடியோ

 

தேசியக் கொடி மீதான தல தோனியின் பற்று; மற்றொரு நெகிழ்ச்சி சம்பவம்-வீடியோ

நாட்டின் தேசியக்கொடி அவமதிக்கப்பட்டுவிடக்கூடாது என கிரிக்கெட் வீரர் தோனி செய்த செயல் அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது

ஹாமில்டன்: நாட்டின் தேசியக்கொடி அவமதிக்கப்பட்டுவிடக்கூடாது என கிரிக்கெட் வீரர் தோனி செய்த செயல் அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

இந்திய அணி தனது நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் அந்நாட்டு அணிக்கு ஓருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் அபாரமாக கைப்பற்றியது. அதனை தொடர்ந்து நடைபெற்ற இருபது ஓவர் தொடரின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 80 ரன்கள் விந்தியாசத்திலும் அதற்கடுத்த போட்டியிட்டு இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என சமநிலையை எட்டியது. இதையடுத்து, ஹாமில்டன் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று தொடரையும் இழந்தது.

இதனிடையே, நேற்றைய போட்டியின் போது, நியூசிலாந்து வீரர்கள் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். தோனி விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்தார். அப்போது, தோனியின் ரசிகர் ஒருவர் ஆர்வமிகுதியில் மைதானத்துக்குள் இந்திய தேசியக் கொடியுடன் ஓடி வந்து தோனியின் காலில் விழுந்தார். அந்த சமயத்தில் அவர் கையில் வைத்திருந்த தேசியக் கொடி தரையில் படவிருந்தது. ஆனால், தேசியக்கொடி தரையில் படுவதை பார்த்த தோனி கொடியை ரசிகரின் கையில் இருந்து வாங்கியதுடன், காலில் விழுந்த ரசிகரை தூக்கி விட்டு தட்டிக் கொடுத்து அனுப்பினார்.

எந்த விதத்திலும் நாட்டின் தேசியக்கொடி அவமதிக்கப்பட்டுவிடக்கூடாது என தோனி செய்த செயல் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் பிரியமான நபராக அறியப்படுபவர் மகேந்திர சிங் தோனி. 50 ஓவர் உலகக் கோப்பை, 20 ஓவர் உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி உள்ளிட்டவைகளை வென்று சாதனை கேப்டனாக இருக்கும் தோனி, கிரிக்கெட் களத்தையும் தாண்டி அனைவராலும் நேசிக்கப்படும் நபராக இருப்பவர். அதற்கு மற்றொரு சான்றான இந்த நிகழ்வு அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.