தெலங்கானா, ராஜஸ்தானில் வாக்குப்பதிவு தொடக்கம்

 

தெலங்கானா, ராஜஸ்தானில் வாக்குப்பதிவு தொடக்கம்

தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது

ஐதராபாத்: தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது. அதன்படி சத்தீஸ்கரில் நவம்பர் 12 மற்றும் 20-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது.  அதேபோல் மத்திய பிரதேசம் மற்றும் மிசோரமில் கடந்த நவம்பர் 28-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தெலங்கானா மற்றும் ராஜஸ்தானில் இன்று தேர்தல் (டிசம்பர் 7) நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி 119 தொகுதிகள் கொண்ட தெலங்கானாவில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. நக்சலைட்டுகள் அதிகமிருக்கும் 13 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவு பெறுகிறது.

இந்த தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்குதேசம், பாரதிய ஜனதா கூட்டணி என மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் பாதுகாப்பு பணியில் மாநில காவல்துறையினர், துணை ராணுவம், என சுமார் ஒரு லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தலில் சந்திரமுகி என்ற திருநங்கை உட்பட 1,821 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

rajasthanஇதேபோல் 200 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானிலும் 199 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. ராம்கர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் உயிரழ்ந்துவிட்டதால் அங்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 51,687 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாஜக சார்பில் 199 தொகுதிகளிலும், காங்கிரஸ் சார்பில் 194 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.