தெலங்கானா முதல்வருக்கு தேர்தல் ஆணையம் கடும் கண்டனம்

 

தெலங்கானா முதல்வருக்கு தேர்தல் ஆணையம் கடும் கண்டனம்

டெல்லி: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிற்கு தேர்தல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தெலங்கானா மாநில அமைச்சரவைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில், சட்டப்பேரவையை கலைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை ஆளுநர் நரசிம்மனிடம் முதல்வர் சந்திரசேகர ராவ் வழங்கினார். ஆளுநரும் அதனை ஏற்றுக் கொண்டார். அதன்பின்னர் தெலங்கானா மாநில சட்டப்பேரவை கலைக்கப்பட்டது. வருகிற டிசம்பர் மாதம் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கர் மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலோடு தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலையும் நடத்த சந்திரசேகர ராவ் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனிடையே, 105 வேட்பாளர்களின் பட்டியலை சந்திரசேகர ராவ் வெளியிட்டார். மேலும், தேர்தல் ஆணையரிடம் தான் பேசியிருப்பதாகவும் நவம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார்.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் .பி.ராவத் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தெலங்கானா முதல்வரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேர்தலை தாமதமின்றி நடத்த வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் கொள்கை என்றும், அதேசமயம், யாரும் தன்னிச்சையாக தேர்தல் காலத்தை அறிவிப்பது செல்லாது என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் அதிகாரியின் அறிக்கை வந்த பிறகு தேர்தலுக்கான தேதி குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும், அடுத்த ஆண்டு நான்கு மாநில சட்டமன்றத் தேர்தல்களுடன் சேர்த்து தெலங்கானா மாநில தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.