தெலங்கானா சட்டமன்ற தேர்தல் திருநங்கை வேட்பாளர் எங்கே? திடீர் மாயம்

 

தெலங்கானா சட்டமன்ற தேர்தல் திருநங்கை வேட்பாளர் எங்கே? திடீர் மாயம்

தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த திருநங்கை வேட்பாளர் சந்திரமுகி திடீரென மாயமாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்: தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த திருநங்கை வேட்பாளர் சந்திரமுகி திடீரென மாயமாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் வரும் டிசம்பர் 7-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் ராஜா சிங்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் முகேஷ் கவுத்தும் போட்டியிட இருக்கின்றர். இதில் முதன்முறையாக 32 வயதான திருநங்கை சந்திரமுகி என்பவர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவருக்கு பரவலான ஆதரவு எழுந்திருந்தது.

இவர் மார்க்ஸிஸ்ட்-பகுஜன் (இடது) கூட்டணி கட்சிகளில், பகுஜன் (இடது) கட்சி சார்பில் ஹைதராபாத்தில் இருக்கும் கோஷாமஹல் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். தேர்தலில் வெற்றி பெற்று திருநங்கைகள் முன்னேற்றத்திற்கு குரல் கொடுப்பேன் என கூறியிருந்தார்.

இந்நிலையில், சந்திரமுகி திடீரென நேற்று மாயமாகியுள்ளார். இதனால் தெலங்கானாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பஞ்சாரா ஹில்ஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கடத்தப்பட்டு இருக்கலாம் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக திருநங்கை ஒருவர் போட்டியிட இருந்த சூழலில் அவர் மாயமாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சந்திரமுகியை உடனடியாக மீட்டு அவர் தேர்தலில் போட்டியிட காவல்துறையினர் தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என சமூக வலைதளவாசிகள் உட்பட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.