தெலங்கானாவில் பயிற்சி டாக்டர்களை வெளியேற்றிய வீட்டு உரிமையாளர்கள்! – இதுதான் மருத்துவர்களுக்கு அளிக்கும் மரியாதையா என கொந்தளிப்பு

 

தெலங்கானாவில் பயிற்சி டாக்டர்களை வெளியேற்றிய வீட்டு உரிமையாளர்கள்! – இதுதான் மருத்துவர்களுக்கு அளிக்கும் மரியாதையா என கொந்தளிப்பு

தெலங்கானாவில் பயிற்சி மருத்துவர்களை வீட்டைவிட்டு காலி செய்யச் சொல்லி நடுத்தெருவில் நிறுத்திவிட்டதாக பயிற்சி மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஹைதராபாத்: தெலங்கானாவில் பயிற்சி மருத்துவர்களை வீட்டைவிட்டு காலி செய்யச் சொல்லி நடுத்தெருவில் நிறுத்திவிட்டதாக பயிற்சி மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் வாரங்கல்லில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாக (பயிற்சி மருத்துவர்) பணியாற்றி வரும் ஒருவர் தனக்கு நேர்ந்த சோகத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் வாரங்கல் எம்.ஜி.எம் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறேன். தெலங்கானாவில் உள்ள பெரும்பாலான மருத்துவர்களை வீட்டு உரிமையாளர்கள் காலி செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தி வருகின்றனர். வைரஸ் பாதிப்புக்கு எளிதில் ஆளாக வாய்ப்புள்ளதால் இப்படி செய்துள்ளனர். ஒரு வீட்டு உரிமையாளர் எங்களைப் பார்த்து அழுக்கானவர்கள், சுகாதாரக் கேடானவர்கள் என்று கூறியுள்ளார். எந்த கால அவகாசமும் இன்றி வீட்டைவிட்டு மருத்துவர்களை வெளியேற்றி வருகின்றனர். பெரும்பாலான மருத்துவர்கள் செல்ல வழியின்றி சாலையில் தங்கள் உடமைகளுடன் நின்றுகொண்டிருக்கிறார்கள். ரெசிடன்ட், ஹவுஸ் சர்ஜன் மருத்துவர்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காகத்தான் நான் 14 மணி நேரம் படித்தேனா?

ttn

எங்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதிகள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாற்ற மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதே போன்ற நிலை ஆந்திராவிலும் உள்ளது என்று கேள்விப்பட்டேன். இந்த பேரழிவு தொற்று நேரத்திலும் கடந்த ஐந்து மாதமாக எந்த உதவித் தொகையும் பெறாமல், எந்த தடுப்பு கருவியுமின்றி நாங்கள் தினமும் பணியாற்றி வருகிறோம். ஞாயிற்றுக்கிழமை கைத்தட்டல்களும் மணி அடித்தலும் எதற்காக? என்ன மதிப்பு, மரியாதை, நன்றியை அவர்கள் எங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை காட்டினார்கள்? இவர்களின் உடல் நலத்துக்காக நாங்கள் எதற்கு எங்கள் வாழ்க்கையை பணயம் வைக்க வேண்டும். எங்கள் உயிரை ஆபத்தில் வைத்து பணியாற்றினால் மக்கள் எங்களை இப்படித்தான் நடத்துவார்களா?” என்று கோரியுள்ளார்.

இவரின் இந்த பதிவை தற்போது பலரும் தெலங்கானா முதல்வர், பிரதமர் மோடி ஆகியோரை டேக் செய்து பகிர்ந்து வருகின்றனர். மருத்துவர்களுக்கு எதிரான நடவடிக்கையை தடுத்து நிறுத்தவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தரவும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.