தெலங்கானாவின் கொடூர கிணறு; தோண்ட தோண்ட வரும் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண்களின் எலும்புகள்!

 

தெலங்கானாவின் கொடூர கிணறு; தோண்ட தோண்ட வரும் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண்களின் எலும்புகள்!

தெலங்கானா மாநிலம் ஹாஜிபூர் கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு சிறுமி கடந்த 25-ம் தேதி பள்ளியில் இருந்து திரும்பும் போது மாயமானார்

ஹைதராபாத்: பள்ளி மாணவிகள், சிறுமிகள், இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து பாழடைந்த கிணற்றில் வீசிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஹாஜிபூர் கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு சிறுமி கடந்த 25-ம் தேதி பள்ளியில் இருந்து திரும்பும் போது மாயமானார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், கைவிடப்பட்ட பாழுங்கிணறு ஒன்றின் அருகே சிறுமியின் கைப்பை கிடப்பதை கண்டறிந்துள்ளனர்.

rape

இதையடுத்து கிணற்றில் இறங்கி சோதனை மேற்கொண்ட போலீசார் மாணவியின் சடலத்தை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, தடயங்களை தேடி அதற்கு அடுத்த நாள் கிணற்றினுள் இறங்கிய போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு, 18 வயதான மற்றொரு இளம்பெண்ணின் சடலத்தை கண்டறிந்து அதனை போலீசார் மீட்டனர்.

srinivasa reddy

அந்த பெண்ணும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தாக தெரிய வந்ததையடுத்து, கிணற்றின் உரிமையாளரும், லிஃப்ட் மெக்கானிக்கான ஸ்ரீனிவாஸ் (27) என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது, அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவிக்கவே, அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை போலீசார் மேற்கொண்டனர். அப்போது, பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் மற்றும் பெண்களை லிஃப்ட் தருவதாக கூறி அழைத்துச்சென்று இத்தகைய செயலில் ஈடுபட்டதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த தகவல் தீயாக பரவ, கடந்த 2015-ஆம் ஆண்டில் காணாமல் போன 11 வயது சிறுமியின் பெற்றோர், தங்களது மகள் மாயமானது குறித்து போலீசாரை அணுகியுள்ளனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து ஸ்ரீனிவாசனிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், அச்சிறுமியின் உடலை அதே பகுதியில் உள்ள வேரு ஒரு கைவிடப்பட்ட பாழடைந்த கிணற்றில் இருந்து மீட்டுள்ளனர்.

telangana rape

அதேசமயம், இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஸ்ரீனிவாசனின் வீட்டை தீயிட்டு கொளுத்தி, குற்றவாளிக்கு கடுமையான தண்டனை பெற்று தர வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராமத்தில் தொடரும் பதற்றம் காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் நிலைமை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதனிடையே, ஸ்ரீனிவாசனிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அண்டை மாநிலமான ஆந்திராவின் கர்னூல் நகரத்தை சேர்ந்த பெண் ஒருவரை, கடந்த 2016-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்து, அந்த பெண்ணின் சடலத்தை, தண்ணீர் தொட்டிக்குள் தூக்கி எறிந்ததாக மற்றொருமொரு அதிர்சிகர தகவல் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.