தெய்வத்தின் சொந்த நாட்டில் தெய்வத்தை விமர்சிக்கும் எழுத்தாளர்கள்.

 

தெய்வத்தின் சொந்த நாட்டில் தெய்வத்தை விமர்சிக்கும் எழுத்தாளர்கள்.

ஒப்பீட்டளவில் இந்தியாவின் எந்த மாநிலத்தையும் விட மத நல்லிணக்கம், கல்வி,விமர்சனத்தை ஏற்கும் மனப்பாங்கு இவற்றில் முன்னிலையில் இருக்கும் மாநிலம் கேரளா.இருந்தும் சமீபகாலமாக எழுத்தாளர்கள் தாக்கப் படுவதும் எல்லா மதத்திலும் வலதுசாரிகள் கை ஓங்குவதும் வெளிப்படையாகத் தெரிகிறது!

writer

மலையாள திரைப்படங்களில் எல்லா ஜாதிகளையும் மதங்களையும் துச்சமாக மதித்து கேலி செய்வார்கள்,அதை ரசிகர்களும் சிரித்தபடியே கடந்து போவார்கள்.1986-ல் நிக்கோஸ் கஸாண்ட்ஸ்கிஸ் எழுதிய’ தி லாஸ்ட் டெம்ட்டேஷன் ஆஃப் ஜீஸஸ் கிரைஸ்ட் ‘ என்கிற நாடகத்தை ‘ கிறித்துவிண்டே ஆறாம் திருமுறிப்பு’ என்கிற பெயரில் நாடகமாக மேடை ஏற்றியபோது கேரளத்திற்கு முதல் முறையாக ‘ மதம் ‘ பிடித்தது.

ஒரு வழியாக அந்த நாடகத்தை தடை செய்து மாநிலத்தில் அமைதியைக் கொண்டு வந்தது கேரள அரசு.இது கிட்டத்தட்ட 40 வருடம் முன்பு.ஆனால் சமீபகாலமாக கேரளத்தில் கிட்டத்தட்ட மக்கள் தொகையில் சமமாக இருக்கும் இந்து,கிறிஸ்தவ , இஸ்லாமிய மாதங்களில் வலதுசாரிகளின் ஊடுருவலும் வன்முறையும் அதிகமாகி வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு ‘புர்கா’ என்கிற தனது கவிதையின் மூலம் இஸ்லாமியரை இழிவு படுத்தியதாக பிரபலக்கவிஞர் பவித்திரன் தீக்குனி இஸ்லாமிய வலதுசாரிகளால்  தாக்கப்பட்டார்.’ படச்சோண்டே சித்திரபிரதர்ஷனம்’ என்று தனது சிறுகதைத் தொகுதிக்கு பெயர்வைத்தற்காக பி.ஜிம்ஷார் என்கிற எழுத்தாளரை குட்டநாட்டில் இஸ்லாமிய வலதுசாரிகள் தாக்கி சாலையோரம் வீசிச்சென்று விட்டார்கள். 

கன்னியாஸ்த்திரி மடத்தில் பிஷப் முதல் சாதாரண பாதிரிவரை கன்னியாஸ்த்திரிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக தன் வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை ‘ கர்த்தாவிண்டே நாமத்தில்’ என்கிற பெயரில் புதககமாக்கிய சிஸ்ட்டர் லூசி கலபுரத்தை கொழுத்த கையில் தீவட்டிகளுடன் வந்தது வலது சாரி கிறிஸ்த்தவ கும்பல்.

இப்போது மாத்துரு பூமி என்கிற கேரளத்தின் மிக மூத்த செய்திதாள் இந்துத்துவ இயக்கங்களால் குறிவைத்து ஒதுக்கப்படுகிறது. அதன் பிரதிகளைக் கொளுத்தியும்,இந்துக்கள் மாத்துரு பூமியின் சந்தாவை திரும்பப் பெருங்கள் என்றும் அங்கங்கே ரகளை செய்கிறார்கள். இதுவரை மூன்று லட்சம் சந்தாதாரர்கள் விலகி விட்டார்கள்.பிரபல ஜுவல்லரி நிறுவனம் விளம்பரம் தருவதை நிறுத்தி விட்டது என்றெல்லாம் வதந்தியை பரப்புகிறார்கள்.

writer

காரனம் எஸ்.ஹரீஸ் என்கிற எழுத்தாளர் எழுதிய ‘மீச’ என்கிற ஒரு தொடர்கதை.தென் திருவிதாங்கூர் பகுதியில் 50 களில் கதை நடக்கிறது.  புலையர் இனத்தைச் சேர்ந்த ஒருவன் கிறிஸ்த்துவ மதத்துக்கு மாறி பெரிய மீசை வளர்த்து அங்கிருந்த ஆண்ட சாதியினருக்கு அதிர்ச்சி தருகிறான்.’அவம் மீசை மற்றவர்களு’ உறுத்தலாக இருக்கிறது என்று சொல்லி ஒரு தலித்தின் மீசையை ஜாதி எதிர்ப்பின் உருவகமாக்கி அன்றைய கேரள சமூக அமைப்பை பகடி செய்திருக்கிறார் ஹரீஸ்.மீச நாவல் பல பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற்று இருக்கிறது. விமர்சகர்கள் கொண்டாடுகிறார்கள். 

ஆனால்  ‘ கேரள இந்து ஐக்கிய வேதி’ பிஜேப்பியின் மகிளா மோர்ச்சா,ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் ஹரீசின் மீச நாவல் இந்துக்களை,குறிப்பாக இந்துப் பெண்களை அவமானப் படுத்தி விட்டதாக குற்றம் சாட்டுகின்றன்.இது கேரள கலை கலாச்சாரத்தின் மீது தாக்குதல் நடக்கும் இருண்ட காலம் என்கிறார் பிரபல விமர்சகர் குரீபுழா ஸ்ரீகுமார்.நான் மிகவும் பலவீனமானவன்,இந்த நாட்டை ஆள்பவர்களோடு என்னால் போராட முடியாது என்று தனது நாவலை திரும்பப் பெற்றுக்கொண்டு விட்டார் எஸ்.ஹரீஸ். கடந்த தேர்தலின் போது கேரளத்தில் இந்து தாலிபன் தோன்றி விட்டது என்று சசிதரூர் சொன்னதுதான் நினைவு வருகிறது.