தூத்துக்குடி துறைமுகத்துக்கு வரவுள்ள போர்க்கப்பல்.. பார்வையிடப் பொதுமக்களுக்கு அனுமதி !

 

தூத்துக்குடி துறைமுகத்துக்கு வரவுள்ள போர்க்கப்பல்.. பார்வையிடப் பொதுமக்களுக்கு அனுமதி !

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 14 ஆம் தேதி இந்தியக் கடற்படை தினமாகக் கொண்டாடப்படுகிறது. வரும் 14 மற்றும் 15 ஆம் தேதி போர்க்கப்பல் கொண்டுவரப்பட உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 14 ஆம் தேதி இந்தியக் கடற்படை தினமாகக் கொண்டாடப்படுகிறது. நாளை மறுநாள் வரவிருக்கும் இந்த தினத்தைக் கொண்டாடும் வகையில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வரும் 14 மற்றும் 15 ஆம் தேதி போர்க்கப்பல் கொண்டுவரப்பட உள்ளது. இதனைப் பொதுமக்கள் பார்வையிடலாம் என்றும் அதற்கான விதிமுறைகளையும் கடற்படை அதிகாரிகள் செய்திக் குறிப்பில் வெளியிட்டுள்ளனர். 

ttn

அந்த செய்திக் குறிப்பில், போர்க்கப்பலை, டிசம்பர்14-ஆம் தேதி பள்ளி மாணவ, மாணவிகள் மட்டும் மதியம் 1.00 மணி முதல் 5.00 மணி வரை பார்வையிடலாம் என்றும் அவர்கள் வரும் போது பள்ளி சீருடையில் ஆசிரியர்களுடன், பள்ளி முதல்வரின் சீல் வைத்த பெயர் பட்டியலுடன் வர வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதற்கு மறுநாள், 15-ஆம் தேதி உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளும், பொது மக்களுக்கும் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை போர்க்கப்பலைப் பார்வையிடலாம் என்றும் அவர்கள் வரும் போது ஆதார் அட்டையைக் கண்டிப்பாகக் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. 

ttn

போர்க்கப்பலைப் பார்வையிட வருபவர்கள் தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தின் பிரதான வாசல் வழியாக அனுமதிக்கப்படுவார்கள் என்றும் புகைப்படக்கருவிகள் உள்ளிட்ட பொருட்களைத் துறைமுகத்திற்குள் கொண்டு செல்லக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், பார்வையிட வரும் மக்கள் கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடி அவர்களது வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் என்றும் இந்த பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்த விவரங்களை  7356218196  என்ற தொலைப்பேசி எண்ணைப் பயன்படுத்தித் தெரிந்து கொள்ளலாம் என்றும் மின்னஞ்சல் வாயிலாகத் தெரிந்துகொள்ளலாம் என்றும் கடற்படை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.