தூத்துக்குடி கலவரம்: விசாரணையை தொடங்கியது சிபிஐ

 

தூத்துக்குடி கலவரம்: விசாரணையை தொடங்கியது சிபிஐ

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறை தொடர்பாக சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறை தொடர்பாக சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, தமிழக அரசின் உத்தரவின் பேரில் விதிமுறைகளை சரியாக பின்பற்றாத ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது.

இதையடுத்து, துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பான வழக்கு விசாரணையை சிபசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கு விசாரணையை சிபிஐ போலீசாருக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வன்முறை தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசாரிடமிருந்து சிபிஐ-க்கு மாற்றி கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி உத்தரவிட்டது. மேலும், 4 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் சிபிஐ-க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் சிபிஐ, விசாரணையைத் தொடங்கியுள்ளது. தூத்துக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிபொருள் தடுப்பு சட்டப் பிரிவு, வன்முறையில் ஈடுபடுதல், ஆபத்தான ஆயுதங்கள் மூலம் காயப்படுத்துவது, அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தல், அத்துமீறி வீட்டுக்குள் புகுவது, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.