துறைமுகத்தில் குவிந்து கிடக்கும் இறக்குமதி வெங்காயம்! வீணாக அழுகி போவதை தவிர்க்க குறைந்த விலையில் விற்பனை மத்திய அரசு முடிவு…

 

துறைமுகத்தில் குவிந்து கிடக்கும் இறக்குமதி வெங்காயம்! வீணாக அழுகி போவதை தவிர்க்க குறைந்த விலையில் விற்பனை மத்திய அரசு  முடிவு…

துறைமுகத்தில் குவிந்து கிடக்கும் இறக்குமதி வெங்காயம் வீணாக அழுகி போவதை தவிர்க்க குறைந்த விலைக்கு மத்திய அரசு விற்பனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெங்காயம் சாகுபடி அதிகம் நடைபெறும் மகாராஷ்டிரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில மாதங்களுக்கு பெய்த எதிர்பாராத மழை காரணமாக, வெங்காயம் உற்பத்தி கடுமையாக பாதித்தது. இதனால் சந்தைக்கு வெங்காய வரத்து குறைந்தது. வரத்து குறைந்ததால் வெங்காயத்தின் விலை தாறுமாறாக ஏறியது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.

வெங்காய சாகுபடி பாதிப்பு

இதனையடுத்து மத்திய அரசு வெங்காய விலையை குறைக்க, ஏற்றுமதிக்கு தடை, வர்த்தகர்கள் கையிருப்பு வைக்க உச்ச வரம்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேலும் வெளிநாடுகளிலிருந்து 1.20 லட்சம் டன் வெங்காய் இறக்குமதி செய்ய முடிவு செய்தது. மத்திய அரசு சார்பாக எம்.எம்.டி.சி. நிறுவனம் 14 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்தது. இறக்குமதி செய்த வெங்காயத்தை மாநிலங்களுக்கு கிலோ ரூ.58 என்ற விலையில் விற்பனை செய்தது. மேலும் போக்குவரத்து செலவினத்தையும் ஏற்றுக் கொண்டது.

வெங்காயம்

இதனையடுத்து உள்நாட்டில் வெங்காயத்தின் விலை குறைந்தது. அதேசமயம், உள்நாட்டு வெங்காயத்துக்கும், இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தின் சுவைக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதால், எம்.எம்.டி.சி. நிறுவனத்துக்கு  கொடுத்த ஆர்டரை பல மாநிலங்கள் திரும்ப பெற்றுள்ளதாக தகவல். இதனால் துறைமுகங்களில் இறக்குமதி வெங்காயம் குவிந்து கிடக்கிறது.துறைமுகங்களில் குவிந்து கிடக்கும் வெங்காயம் வீணாக அழுகி போவதை தவிர்க்க, மத்திய அரசு அவற்றை குறைந்த விலையில் விரைவில் விற்பனை செய்ய உள்ளதாக தகவல். ஒரு கிலோ வெங்காயம் ரூ.22-23 என்ற விலையில் மத்திய அரசு விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.