துருக்கியில் பனிச்சரிவில் சிக்கி மீட்பு பணியாளர்கள் உட்பட 38 பேர் உயிரிழப்பு

 

துருக்கியில் பனிச்சரிவில் சிக்கி மீட்பு பணியாளர்கள் உட்பட 38 பேர் உயிரிழப்பு

துருக்கியில் பனிச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புப் பணியாளர்கள் 33 பேர், அடுத்து ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.

அங்காரா: துருக்கியில் பனிச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புப் பணியாளர்கள் 33 பேர், அடுத்து ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.

துருக்கியில் தற்போது கடும் குளிர் நிலவி வருவதால் அந்நாட்டில் உள்ள மலைப்பாங்கான பகுதிகளில் அடிக்கடி பனிச்சரிவுகள் ஏற்படுகின்றன. நேற்று முன்தினம் அந்நாட்டின் வான் மாகாணத்தில் உள்ள பாசெசேஹிர் மாவட்டத்தில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சிலர் சிக்கிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து தகவலறிந்து மீட்பு பணியினர் சம்பவ இடத்திற்கு வந்து 8 பேர் உயிருடனும், 5 பேரை சடலமாகவும் மீட்டனர். இந்த பனிச்சரிவில் சிக்கி 54 பேர் காயமடைந்தனர். மேலும் பலர் காணாமல் போயினர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இன்று இரண்டாவதாக ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த 33 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். துருக்கி அரசு இதனை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் எட்டு இராணுவ போலீஸ் அதிகாரிகள், அரசால் நியமிக்கப்பட்ட மூன்று கிராம காவலர்கள், மூன்று தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஒன்பது தன்னார்வலர்கள் அடங்குவர். மேலும் பனியின் கீழ் சிலர் சிக்கியுள்ளனர். அவர்களை தேடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. துருக்கியில் பனிச்சரிவு காரணமாக இதுவரை மொத்தம் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.