துரத்தும் கடன்…….ரூ.22 ஆயிரம் கோடி சொத்துக்களை விற்க தயாராகும் அனில் அம்பானி!

 

துரத்தும் கடன்…….ரூ.22 ஆயிரம் கோடி சொத்துக்களை விற்க தயாராகும் அனில் அம்பானி!

அனில் அம்பானி தனது கடனை குறைக்கும் நோக்கில் ரூ.22 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களை விற்பனை செய்ய தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 15 வருடங்களுக்கு முன்பு இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனில் அம்பானி. இன்று அவர் நிலைமை மிகவும் சிக்கலான நிலையில் உள்ளது. துரத்தும் கடன்களால் திணறி வருகிறார் அனில் அம்பானி. அண்மையில், கையில் ரூ.400 கோடி இல்லாமல் சிறைக்கு செல்ல வேண்டிய நிலையில் இருந்த அனில் அம்பானியை அவரது அண்ணன் முகேஷ் அம்பானி பணம் கொடுத்து காப்பாற்றினார்.

கடன் சுமை

அனில் அம்பானி தனது நிறுவன கடன்களை தொடர்ந்து அடைத்து வருகிறார்.  இந்நிலையில், கடந்த 14 மாதங்களில் ரூ.35 ஆயிரம் கோடி கடனை அடைத்து விட்டதாக கடந்த மாதம் 14ம் தேதி ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்தது. ஆனாலும், இன்னும்  சுமார் ரூ.94 ஆயிரம் கோடி கடனை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குரூப் கொடுக்க வேண்டியது உள்ளது.

ரிலையன்ஸ்

இந்நிலையில் கடனை குறைக்க ரூ.22 ஆயிரம் கோடி மதிப்பிலான சாலை திட்டங்கள் மற்றும் ரேடியோ நிலையங்களை விற்பனை செய்ய அனில் அம்பானி திட்டமிட்டுள்ளார். ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் 9 சாலை திட்டங்களை விற்பனை வாயிலாக ரூ.9 ஆயிரம் கோடியும், ரேடியா பிரிவை ரூ.1,200 கோடிக்கும், நிதி வர்த்தகத்தை விற்பதன் வாயிலாக ரூ.11,500 கோடியும் திரட்ட உள்ளார். விற்பனை வாயிலாக கிடைக்கும் நிதியை அப்படியே தூக்கி கடனை அடைத்து விட அனில் அம்பானி திட்டமிட்டுள்ளதாக தகவல்.