துப்பாக்கிச் சூடு நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள்…. வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட உ.பி. போலீஸ்…. வாயை திறக்காத எதிர்க்கட்சிகள்

 

துப்பாக்கிச் சூடு நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள்…. வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட உ.பி. போலீஸ்…. வாயை திறக்காத எதிர்க்கட்சிகள்

உத்தர பிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இது தொடர்பான வீடியோ ஆதாரத்தை போலீசார் வெளியிட்டனர். ஆனால் இது குறித்து எதிர்க்கட்சிகள் வாயே திறக்காமல் மவுனம் சாதிக்கின்றனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் பொதுமக்களை தூண்டி விட்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட வைத்து வருகின்றன. இந்த ஆர்ப்பாட்டங்கள் பெரும் கலவரமாக வெடித்தன. குறிப்பாக உத்தர பிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் வன்முறையாக வெடித்தன.

உத்தர பிரதேச போலீசார்

ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டக்காரர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் சில சில கலவரகாரர்கள் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதனையடுத்து உத்தர பிரதேச போலீசார் பதிலடி கொடுத்தனர். கடந்த வாரம் நடைபெற்ற இந்த சம்பவங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் 15 பேர் பலியாகினர். உடனே எதிர்க்கட்சிகள் வழக்கம் போல் அரசு மற்றும் போலீசுக்கு எதிராக குரல் கொடுத்தன. 

கலவரமாக மாறிய ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மீரட் நகரில் நடந்த குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதற்கான ஆதாரமாக வீடியோக்கள், புகைப்படங்களை போலீசார் நேற்று வெளியிட்டனர். அதில் ஒரு வீடியோவில் முகமூடி அணிந்த நபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் சுற்றி திரியும் காட்சி தெளிவாக தெரிந்தது. போலீசார் இது குறித்து கூறுகையில், இது போன்ற தாக்குதல்களால்தான் நாங்கள் பதில் தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது என தெரிவித்தனர். போலீசார் வெளியிட்ட ஆதாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் வாயே திறக்காமல் மவுனம் சாதித்து வருகின்றன.