துணை முதல்வர் ஓ.பி.எஸ்.,-க்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

 

துணை முதல்வர் ஓ.பி.எஸ்.,-க்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு சம்மன் அனுப்பியுள்ளது

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு சம்மன் அனுப்பியுள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

அதனையடுத்து விசாரணையை தொடங்கிய ஆணையம், ஜெயலலிதா உடன் இருந்தவர்கள், அரசு மூத்த அதிகாரிகள், அப்போலோ நிர்வாகம், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள், அரசு மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் ஆனுப்பி விசாரித்து வருகிறது. சம்மன் அனுப்பப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி ஆணையத்திடம் விளக்கம் அளித்து வருகின்றனர். இதுவரை சுமார் 130-க்கும் மேற்பட்டோர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் வருகிற 20-ம் தேதி ஆஜராகுமாறு துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பொன்னையன் உள்ளிட்டோரும் ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.