துணைவேந்தர் பதவிக்கு தமிழிசையின் கணவர் சவுந்தரராஜன் போட்டி

 

துணைவேந்தர் பதவிக்கு தமிழிசையின் கணவர் சவுந்தரராஜன் போட்டி

எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு பாஜக மாநில தலைவர் தமிழிசையின் கணவர் சவுந்தரராஜன் விண்ணப்பித்துள்ளார்.

சென்னை: எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு பாஜக மாநில தலைவர் தமிழிசையின் கணவர் சவுந்தரராஜன் விண்ணப்பித்துள்ளார்.

தமிழக அரசுக்கு சொந்தமான எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சென்னை கிண்டியில் இயங்கி வருகிறது. அந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவி தற்போது காலியாக இருக்கிறது. அந்த பதவிக்கு போட்டியிட விரும்பும் தகுதியான நபர்கள், கடந்த நவம்பர் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசிதழில் அறிவிப்பு வெளியானது.

மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருக்கான தகுதிகளாக மருத்துவ பணியில் 20 ஆண்டுகள் அனுபவமும், 10 வருடம் மருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில், அந்த பதவிக்கு இதுவரை 41 மருத்துவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில், தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் கணவர் சவுந்தரராஜனின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

புகழ் பெற்ற சிறுநீரக மருத்துவ துறை நிபுணராக விளங்கும் டாக்டர்.சவுந்தரராஜன், அரசு மற்றும் தனியார் துறையில் மருத்துவர் மற்றும் மருத்துவ பேராசிரியராக பணியாற்றி அனுபவம் பெற்றவர். நடிகர் ரஜினிகாந்த், மறைந்த தலைவர்கள் ஜானகி ராமச்சந்திரன், மூப்பனார் ஆகியோருக்கு இவர் சிகிச்சை அளித்திருக்கிறார். மேலும், விண்ணப்பித்துள்ளவர்களின் தகுதி, அனுபவம், நிர்வாக திறமை ஆகியவற்றின் அடிப்படையில் துணை வேந்தரை தேர்வுக்குழு தேர்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.