தீவிரவாதிகள் தாக்குதல் எச்சரிக்கை எதிரொலி… டிக்கெட் கட்டணத்துக்கு உச்சவரம்பு நிர்ணயம் செய்த ஏர் இந்தியா….

 

தீவிரவாதிகள் தாக்குதல் எச்சரிக்கை எதிரொலி… டிக்கெட் கட்டணத்துக்கு உச்சவரம்பு நிர்ணயம் செய்த ஏர் இந்தியா….

விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலையடுத்து, ஏர் இந்தியா நிறுவனம் டெல்லி-ஸ்ரீநகர் இடையிலான விமான பயண கட்டணத்துக்கு உச்ச வரம்பு நிர்ணயம் செய்துள்ளது.

காஷ்மீருக்கு அமர்நாத் யாத்திரைக்காக வந்துள்ள பக்தர்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிள்ளதாக உள்துறைக்கு கடந்த சில தினங்களுக்கு முன் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அமர்நாத் யாத்திரை பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உடனடியாக காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என காஷ்மீர் மாநில உள்துறை அமைச்சகம் சார்பில் உத்தரவிடப்பட்டது. 

அமர்நாத் யாத்திரை

அரசின் எச்சரிக்கையடுத்து, அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் காஷ்மீரை விட்டு அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர். பெரும்பாலான பயணிகள் விமான பயணத்தை தேர்ந்தெடுப்பதால் விமான டிக்கெட் விலை விறுவிறுவென ஏற்றம் கண்டு வருகிறது. இதனால் அமர்நாத் யாத்திரையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் தாக்குதல் எச்சரிக்கையை அடுத்து விமான பயண கட்டணம் ரூ.22 ஆயிரம் வரை உயர்ந்தது. அதற்கு முன் ஸ்ரீநகரிலிருந்து டெல்லி செல்ல விமான பயண கட்டணம் சுமார் ரூ.3 ஆயிரம் என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏர் இந்தியா
 
இதனையடுத்து, அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்காக அதிகரிக்கும் டிக்கெட் கட்டணத்தை குறைக்கும்படி விமான சேவை நிறுவனங்களை விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. இதன் பலனாக ஏர் இந்தியா நிறுவனம், டெல்லி-ஸ்ரீநகர் இடையிலான தனது அனைத்து விமானங்களின் பயண கட்டணத்துக்கு  உச்சவரம்பை ஏர் இந்தியா நிர்ணயம் செய்துள்ளது.

இதன்படி, ஏர் இந்தியா விமானத்தில் ஸ்ரீநகரிலிருந்து டெல்லி செல்ல ரூ.6,715ம், டெல்லியிருந்து ஸ்ரீநகர் செல்ல ரூ.6,899ம் செலவாகும் என தகவல். மேலும் இந்த கட்டண உச்ச வரம்பு இம்மாதம் 15ம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் என ஏர் இந்தியாவின் செய்தி தொடர்பாளர் கூறினார்.